யாழில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி!
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பத்தலைவருக்கு எதிராக 4 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சி.சி.ரி.வி. பதிவுகளின் அடிப்படையில் சந்தேகநபர், வீதியில் சென்ற மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே அவர் மீது நான்கு வழக்குகளை யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு வீதியில் வைத்து பாலியல் ரீதியான தொல்லை விளைவித்தார் என்று கொட்டடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பெண்கள் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்கள், அவரை 10ஆம் திகதி கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சந்தேகநபருக்கு எதிராக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபரை கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மேலும் சில மாணவிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை வழங்கினர். அதனடிப்படையில் அந்த மாணவிகளின் முறைப்பாடுகளை பொலிஸார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்வைத்தனர்.
சந்தேகநபர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் முற்படுத்தப்பட்டார்.
“சந்தேகநபர் மாணவி ஒருவருடன் தவறுதாலாக மோதுண்டார். அந்தக் காட்சியே சி.சி.ரி.வில் பதிவாகியுள்ளது. ஆனால் அவர் மாணவிகளுடன் அங்க சேட்டைவிடவில்லை” என்று சந்தேகநபரின் சட்டத்தரணி நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்.
சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்ட நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், அவரின் விளக்கமறியலை வரும் 30ஆம் திகதிவரை நீடித்தார்.