இன்று ஊடகவியலாளர் நிமல்ராஜனின் 18வது ஆண்டு நினைவு நாள்!
மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் பன்னிரெண்டு வருடங்களாகின்றது.
நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக் கொண்டேயிருக்கின்றது.
நினைவழியா நிமல்….
நண்பன் மயில்வாகனம் நிமலராஜனின் 12 வது ஆண்டு நினைவுகளை(19-10-2012) முன்னிறுத்தி…..நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பின் வெளியீடு
நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் பன்னிரெண்டு வருடங்களாகின்றது. நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக் கொண்டேயிருக்கின்றது.
கிராமங்கள், நகரங்களென அவன் பணி நிமித்தம் ஓடித்திரிந்த பகுதிகளெல்லாம் வெறிச்சோடிப்போயிருப்பது போன்றதோர் மனப்பிரம்மை.
யாழ். குடாநாட்டினில் பத்திரிகை துறையினில் சுயாதீன ஊடகவியலாளனாக பரிணமித்தவர்களுள் நிமலராஜன் முதன்மையானவவராகின்றார். ஒரே நேரத்தினில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் கால்பதிக்க நிமலராஜனால் மட்டுமே அப்போது முடிந்தது.
அதிலும் மும்மொழிகளிலும் அவன் கொண்டிருந்த புலமை அனைத்து தரப்புக்களிடையேயும் சிறந்ததொரு தொடர்பாடலை பேண சாதகமாயும் போயிருந்தது.
அதனாலேயே அவனால் தமிழ் ஊடங்களுக்கு இணையாக சிங்கள ஊடகங்களிலும் பெரிதும் காலூன்ற முடிந்திருந்தது.
பிபிசி தமிழோசையிலும் அதே நேரம் சிங்கள சேவையான “சந்தேசிய”விலும் நிமலராஜனின் குரல் எதிரொலித்தது. வீரகேசரி வார வெளியீட்டிலும் மறுபுறத்தே ராவய, ,ரித, ஹரய என அவனால் எழுத முடிந்தது. மறுபுறத்தே சூரியன், ஐ.பி.சி. தமிழ் நெற் என நிமலராஜன் இல்லாத ஊடகங்களே இல்லையென்றாகிவிட்டிருந்த காலமது.
புலம்பெயர் தேசங்களின் கீதவாணி வரை நிமலராஜனின் குரலை எதிர்பார்த்து தமிழ் நேயர்கள் காத்திருந்தார்கள்.
நிமலராஜன் ஊடக்துறைக்கு வந்து சேர்ந்தது தற்செலானதே. சிலர் தம்மைபற்றிக் கூறிக்கொள்வது போன்று நிமலராஜன் ஒன்றும் ஊடகவியலாளனாக பிறக்கும் போது இரட்சித்து அனுப்பப்பட்டிருக்கவில்லை.
நிமலராஜனின் தந்தையார் குறித்த காலப்பகுதியினில் முரசொலியினில் அச்சிடல் பகுதியினில் முகாமையளராக இருந்திருந்தார்.
வீட்டினில் படித்துவிட்டு “சும்மா” இருந்த மகனை ஏதாவது செய்யட்டும் என்று நாளிதழ் விநியோகப் பகுதியினுள் அவரே இணைத்துமிருந்தார்.
இந்திய அமைதிப் படையினதும், துணைக்குழுக்களினதும் கொலைக்கரங்கள் வியாபித்திருந்த காலமது.
நாளிதழ் விநியோகத்திற்காக கிராமம் கிராமமாக அலைந்த நிமலராஜன் மக்களை நேரினில் சந்திக்கின்றவனொருவனான்.
அவன் கொண்டுவந்து சேர்த்த செய்திகள் பெரும்பாலும் நாளிதழ்களினில் தலைப்புச் செய்திகளாகவோ, சிறப்புச் செய்திகளாகவோ பலவேளைகளினில் ஆகியிருந்தது.
திறமையைத் துல்லியமாகப் புரிந்துகொண்ட முரசொலி ஆசிரியர் திருச்செல்வம் நிமலராஜனை ஆசிரிய பீடத்தினுள் உள்ளீர்த்துக் கொண்டார். தமிழ் தேசிய ஊடகத்துறையின் ஓர் முகவரியாக அவன் மாறிப்போக அதுவே வழிகோலியிருந்தது.
குடாநாடு விடுதலைப் புலிகளின் முழமையான கைகளிலிருந்த காலப்பகுதிகளில் அதன் ஆசிரியர்களாகவிருந்த ராதேயனும், ஜெயராஜீம்; அவனைச் செம்மைப்டுத்திக் கொண்டார்கள்.
அன்றாடம் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் நிமலராஜன் ஆழமான புரிதல்கள் கொண்டவனாக பரிணமிக்க அதுவே சந்தர்ப்பமுமாகியிருந்தது.
விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் குடாநாடு இருந்த காலப்பகுதியினில் வெளியிடங்களுக்கான தகவல் தொடர்பாடல் பெரிதும் தடைப்பட்டேயிருந்தது. யாழ்ப்பாணத்தினில் என்ன நடக்கின்றது என்பதனை கண்டறிய முழு உலகமுமே ஆவல் கொண்டிருந்தது.
புலிகள் குடாநாட்டிலிருந்து வெளியேறியிருந்த 1996ம் ஆண்டின் பின்னரான காலப்பகுதிகளிலேயே வெளியுலக தேடல்கள் காரணமாக நிமலராஜன் ஓய்வற்றதோர் ஊடகவியலாளனாகிப் போயிருந்தான்.
அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆசை வார்த்தைகளை நம்பி வலிகாமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த மக்கள் வடிகட்டப்பட்டு நாவற்குழியில் வைத்துக் காணாமற் போக செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளை விட்டுவிடக்கோரி அங்கே அழுது கொண்டிருந்த தாய்மாரைத் தாண்டியே அனைவரும் யாழ்ப்பாணம் வந்தடைந்திருந்தோம்.
அப்போது காணாமல் போனவர்களின் கதைகளை தேடிக்கண்டறிந்து சர்வதேசத்திற்கு கொண்டு சென்றவன் நிமலராஜனே.
செம்மணிப் படுகொலைகள், கிருஷாந்தி குமாராமி உள்ளிட்ட அவளது குடும்பத்தவர்களது படுகொலைகளையும் துணை ஆயதக்குழக்களது கோர முகங்களென தோலுரித்துக் காட்டியவன் நிமலராஜனே.
யாருமே சென்று திரும்ப மறுத்த தீவகப்பகுதிக்கு தேடிச்செல்ல அவன் கொண்டிருந்த ஆர்வம் அசாதாரணமானது.
1999ம் ஆண்டின் இறுதிகளில் பளை மற்றும் அதனையண்டிய பகுதிகளினில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்குமிடையேயான மோதல்களுள் சிக்குண்டிருந்த பொதுமக்களது அவலங்களைச் சொன்னவனும் நிமலராஜனே.
துணிச்சலுடன் சிக்குண்டிருந்த பொதுமக்களை மீட்டெடுக்க நிமலராஜன் மேற்கொண்ட உயிரைப் பணயம் வைத்தான பயணம் எவராலும் மறக்க முடியாதவொன்றே.
பரந்துபட்ட தளத்தினில் நேரமின்றிப் பணியாற்றிய ஊடகவியலாளனாக நிமலராஜன் இருந்தபோதிலும், மறுபுறத்தே எல்லையற்ற மனித நேயம் கொண்டவனாகவும் அவன் இருந்திருந்தான்.
காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் சிலரது குழந்தைகளை பொறுப்பேற்று அவர்களுக்கான கல்வி உதவிகளை வழங்கினான். தன்னுடன் தொடர்புபட்ட அனைவரையும் அவ்வாறான பணிகளில் ஈடுபட ஊக்குவித்தான்.
நிமலராஜனின் மரணம் பத்தோடு பதினொன்றல்ல. தமிழ் தேசிய ஊடகங்ளின் முகவரியொன்று இல்லாதொழிக்கப்பட்டதே மையமாகியிருந்தது.
ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அக்காலப்பகுதியினிலம் அவனது இறுதி ஊர்வலத்தினில் திரண்டிருந்த மக்களும், படுகொலையைக் கண்டித்து நடாத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களது ஆர்ப்பாட்டப் பேரணியும் உண்மையை சொல்லி நின்றன.
எவன் தான் சார்ந்த மக்களை நேசித்து நிற்கின்றானோ அவனை சமூகம் கைவிடுவதில்லையென்பது மீண்டுமொரு முறை துல்லியமாக வெளிப்பட்டு நின்றது.
மரணங்கள் மூலம் உண்மைகளை மறைத்து மூடிவிட முடியாது என்பதும் வெளிப்பட்டேயிருந்தது.
நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் கடந்து விட்டபோது, இழுத்து மூடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுவிட்ட, விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு நாம் கோரப்போவதில்லை.
இந்நாட்டினில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் எவர்களுக்குமே நீதி கிடைக்காதென்பது அனைவரும் அறிந்ததே.
ஆனாலும் கொலையாளிகளதும் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள நாடகமாடிய கறுப்பு ஆடுகளதும் மனது என்றுமே அமைதி கொள்ளப்போவதில்லை.
ஏனெனில் நிமலராஜனைப் படுகொலை செய்ததன் மூலம் அனைத்தையும் முடக்கிவிடலாமென நினைத்திருந்த அவர்களது கனவுகள் பொய்த்தப் போயேயுள்ளன.
ஏனெனில் அவனை முன்னுதாரணமாக கொண்டு நூறு நூறாக ஊடகவியலாளர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே மெய்மையாகும்.