பிரபாகரனின் புகைப்படத்துக்கு ‘லைக்’ செய்த இளைஞன் பிணையில் விடுதலை!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக் செய்து பகிர்வு செய்த குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞன் ஒருவர் 10 மாதங்களுக்குப் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன நேற்று அனுமதியளித்துள்ளார்.
பிரபாகரனின் புகைப்படத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக இரத்தினபுரியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, சிறையில் அடைத்திருந்தனர்.
தினேஷ் குமார் என்ற இளைஞனே பிரபாகரனின் புகைப்படத்துடன் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளதாகவும் அதை “லைக்” செய்த குற்றத்துக்காக விதுஷன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதில் குறித்த பதிவை “லைக்” செய்தமைக்காக கைது செய்யப்பட்டிருந்த விதுஷனுக்கு பிணை வழங்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, அவரை பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தார்.