அவுஸ்திரேலியாவில் இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல்!
அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஆலயத்தில் உள்ளேயிருந்த சுமார் முப்பது கடவுள் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் ஆலய சுவரில் JESUS என்று எழுதிவிட்டு சென்றுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிட்னி Regent Park பகுதியில் அமைந்துள்ள பாரதிய மந்திர் ஆலயமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
முன்பு கிறிஸ்தவ தேவாலயமாக பயன்படுத்தப்பட்டுவந்த இந்த மண்டபம் 1998ஆம் ஆண்டு முதல் இந்து ஆலயமாக பயன்படுத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டு, பெருந்தொகையான இந்து பக்தர்களின் பங்களிப்போடு இயங்கிவருகிறது.
சம்பவ தினத்தன்று ஆலய மண்டபத்திலிந்து புகைவருவதை கண்டு சென்று பார்த்தபோது இளம்பெண் ஒருவர் அங்கிருந்து ஓடினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலினால் சேதமடைந்த சிலைகளை புதுப்பிப்பதற்கும் உடைவுகளை சரி செய்வதற்கு குறைந்தது 50 ஆயிரம் டொலர்கள் தேவை என்று ஆலய பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சிட்னி Auburn பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.