நான் ஜனநாயகத்தின் காவல் தெய்வம்!

நான் ஜனநாயகத்தின் காவல் தெய்வம்!

தேவை ஏற்பட்டால், தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரச பணத்தை மோசடியான முறையில் பயன்படுத்தி, தமது பெற்றோருக்கான நினைவிடத்தை நிர்மாணித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசேட மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்ததுடன் கோத்தபாய ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அதேவேளை தான் ஜனநாயகவாதி அல்ல என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தபாய,

20 வருடங்கள் இராணுவத்தில் கடமையாற்றியதாகவும், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பது இராணுவத்தினர் எனவும், இதனால் தானும் ஜனநாயகத்தின் காவல் தெய்வம் எனவும் கூறியுள்ளார்.

தனக்கு தேவை ஏற்படுமாயின் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ச, ஒரு ஜனநாயகவாதி அல்ல எனவும் அவர் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவே தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net