நிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்!

நிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்!

பிரித்தானியாவின் முன்னாள் துணைப் பிரதமரான நிக் கிளெக்கை உலகளாவிய விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புக் குழுவின் தலைவராக பேஸ்புக் நிறுவனம் நியமித்துள்ளது.

51 வயதான நிக் கிளெக் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக செயற்பட்டதுடன் 2010 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் டேவிட் கமரனின் கொன்சர்வேட்டிவ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தார்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தரவு மோசடி மற்றும் தேர்தல் தலையீடுகள் குறித்த விடயங்களால் பேஸ்புக் நிறுவனம் கடுமையான கண்காணிப்பு மற்றும் அரசாங்க கட்டுப்பாடு அச்சுறுத்தலை பிரித்தானியாவில் எதிர்கொண்டது. அத்தோடு கடந்த வருடம் பல முக்கிய நிர்வாகிகள் இந்நிறுவனத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

நிக் கிளெக்கின் நியமனம் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் (Mark Zuckerberg) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி செரில் சேண்ட்பேர்க் (Sheryl Sandberg) ஆகியோரால் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த நிக் கிளெக் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் பேஸ்புக்கின் பயனர்களுக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்குமான புதிய பொறுப்புகளை கொண்டுவருவதற்கான பயணத்தை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்தப் பயணத்தில் தானும் ஒரு பங்கு வகிக்கமுடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net