கனடாவில் தமிழர் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய பட்றிக்!
இன அடிப்படையிலான பிரதிநிதித்துவதை தான் ஆதரிப்பதாகவும் தமிழ் பிரதிநிதித்துவத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பிரம்ப்டன் வாழ் தமிழ் சமூகத்தினரிடம் பிரச்சாரம் செய்யப்பட்டதாக கூறப்படுவதை கனடாவின் ஒன்றாரியோவின் பிரம்ப்டன் நகர சபைக்கு போட்டியிடும் பெட்றிக் பிரவுண் மறுத்துள்ளார்.
எதிரணியினர் பெட்றிக் பிரவுண் தமிழில் வழங்கியதாக கூறப்படும் பிரச்சார துண்டுப்பிரசுரத்தின் படத்தை அங்குள்ள ஊடகம் ஒன்று அனுப்பி வைத்துள்ளது.
தற்போது பிரம்ப்டன் மாநகராட்சியில் இருக்கின்ற 10 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்கள் என்னை வெளிப்படையாக ஆதரிக்கின்றார்கள்.
மிகுதிப்பேர் நடுநிலை வகிக்கின்றார்கள். ஆனால் ஒருவர் கூட தற்போதைய முதல்வரை ஆதரிக்கவில்லை.
தற்போதைய முதல்வர் 61 நியமனங்களை நகர்சார் அமைப்புகளில் வழங்கியிருக்கின்றார். அவற்றில் ஒன்று கூட தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை.
நான் இனப் பிரதிநிதித்துவத்தை மதிப்பவன். மாற்றங்களை செய்ய முடியுமென்பதை ஏற்கனவே நிரூபித்தவன். எனவே உங்களின் பிரதிநிதித்துவம் இனவிகிதாசாரத்திற்கு ஏற்ப இடம்பெறும்.
எனது வெற்றிக்காக இந்த தேர்தலில் தொண்டாற்ற முடியுமானால் எப்போதும் எனது அலுவலகத்திற்கு வாருங்கள் என பெட்றிக் பிரவுண் தமிழ் சமூகத்தினரிடம் வழங்கிய பிரச்சார பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிரவுண் இந்த பிரசுரம் தனது தரப்பில் இருந்து வரவில்லை என மறுத்துள்ளார். நான் அதனை பார்க்கவில்லை. அதனை எதிரணி ஆதரவாளர் ஒருவர் உருவாக்கி இருக்கலாம். நான் அதனை அனுப்பவில்லை எனவும் பிரவுண் கூறியுள்ளார்.
இன ரீதியான பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவளிக்கவில்லை என தெளிவு படுத்தியுள்ள பிரவுண், தமிழ் சமூகத்திற்கோ வேறு தரப்புக்கோ அப்படியான எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரசுரத்தில் லிண்டா ஜெஃப்ரி தொடர்பான தகவல்கள் துல்லியமாக இருந்தன என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இரண்டு நகர சபை உறுப்பினர்கள் மேயர் (Fortini and Martin) ஆதரிக்கின்றனர் என்பதை நான் நிச்சயமாக அறிவேன். லிண்டா ஜெஃப்ரிக்கான ஆதரவு பூஜ்ஜியமாக இருப்பதாக நான் கூற மாட்டேன்.
பெரும்பான்மையானவர்கள் அவர் மீண்டும் போட்டியிடுவதை விரும்பவில்லை எனவும் பிரவுண் குறிப்பிட்டுள்ளார்.
நகர சபை, மேயரின் அலுவலகம் மற்றும் நியமனங்களில் பன்முக தன்மை தான் ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரம்ப்டன் நகர சபைக்கான தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கள் கிழமை நடைபெறவுள்ளது.