79 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் முதல்வர் விக்கியின் அரசியல் வரலாற்றில் இதையெல்லாம் செய்தாரா?
இன்றய தினம் 79 ஆவது வயதில் பிறந்த தினத்தை கொண்டாடி கொண்டிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் ஐயா அவர்களுக்கு எமது பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.
நீதியரசராக ஒரு சிலரால் அறியப்பட்ட விக்கினேஸ்வரன் ஐயாவை 2013 ஆம் ஆண்டு வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியது கூட்டமைப்பு
தெற்கின் சம்பந்தி, வடக்கு கிழக்கு தெரியாத ஒருவர் என்று பல்வேறு விமர்சனங்களை தனது அறிமுகத்திலேயே பெற்ற விக்கினேஸ்வரனை, அந்த விமர்சனங்களை தாண்டி மக்கள் பெருமளவு வாக்குகளால் வெற்றி பெற செய்தார்கள்
முதலமைச்சராக அவர் வருவதற்காக பிரசாரம் செய்த முதல் கூட்டத்தில் வாய் தடுமாறி அல்லது யதார்த்தமாக அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகளால் கல்லெறி வாங்குற நிலைமைக்கு போனது.
அடுத்த கூட்டத்தில் எழுதி வந்ததை வாசிச்சதார். கரகோஷம் கிடைத்தது.
அதுவே அவரது அரசியல் பயணத்தின் ஆரம்ப கற்பிதமாகியது. ஆரம்பபாடத்தை அவர் கனகச்சிதமாக பின்பற்ற தொடங்கினார்
ஆரம்பத்தில் சில தடுமாற்றங்களை சந்திச்சாலும், பின்னர் மக்கள் கரகோஷம் எழுப்ப கூடியவற்றை தனது பேச்சுகளாக மாற்றினார். வாய் தடுமாறி கூட சொல் வரக்கூடாது என்பதற்காக எழுதியே வாசிச்சார்
இந்த செயல்களை அவர் மிக மிக நுட்பமாக கடைப்பிடித்ததால் அவரை மக்கள் நேசிக்க தொடங்கினார்கள். மக்கள் மட்டுமல்ல அவரை வெறுத்தவர்கள் கூட நேசிக்க தொடங்கினார்கள்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளூரிலேயே சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்புகளை கையேற்ற போதும், மகிந்த முன் பதவி பிரமாணம் செய்து பதவி ஏற்றமை,
முதலமைச்சராகியவுடன் முதலாவதாக போன தமிழக பயணத்தின் போது ” உணர்ச்சிகளை தூண்டுற மாதிரி பேச வேண்டாம், எங்களை அமைதியாக வாழ விடுங்கள் ” என்ற கருத்தில் அமைந்த வேண்டுகோள்,
சிவாஜிலிங்கம் கொண்டு வந்த இனப்படுகொலை தீர்மானத்தை வேண்டாம் என்று தள்ளிப்போட்டது போன்ற ஒரு சில விமர்சனங்கள் அவர் மேல் பாய்ந்து கொண்டிருந்த வேளை தான் அது நடந்தது.
இலங்கையின் ஆட்சி மாறியது. வாசுதேவ நாணயக்காராவின் உற்ற நண்பனானான மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். கூட்டமைப்பின் ஆதரவுடன் இடைக்கலா ரணில் பிரதமராகினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்று மாத காலம் இருக்கும் நேரத்தில் மீண்டும் நாடாளுமன்றத்தையாவது கைப்பற்றுவோம் என்ற வகையில் மகிந்த வியூகம் அமைத்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் தான் சிவாஜிலிங்கத்தால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு தான் நிராகரித்த இனப்படுகொலை தீர்மானத்தை சில செம்மையாக்கலுடன் மீண்டும் தானே கொண்டு வந்து சபையின் ஏக ஆதரவுடன் நிறைவேற்றினார்.
இந்த சம்பவம் தான் விக்கினேஸ்வரன் ஐயா வை நோக்கி உலக தமிழர் திரும்பி பார்க்க வைத்தது.
ஏற்கனவே ஈழ தமிழர்கள் விரும்பிய தலைவராக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த விக்கி ஐயா இதன் பின்னர் உலக தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார்.
இதன் பின்னரான காலங்கள் எல்லாமே அவருக்கான பொற்காலங்கள். எங்கு அவர் எதை பேசினாலும் தமிழ் தேசிய சிந்தனைகளுடன், தமிழர் உரிமை கோரிக்கையும் சேர்த்து பேசினார்.
மக்களிடையே ஆதரவு பெற கூடிய பேச்சுக்களை பேச கற்று கொண்ட விக்கி ஐயா ஒரு கட்டத்தின் பின் உண்மையாகவே அதாவது உள பூர்வாகவே தமிழ் தேசிய சிந்தனையாளராக மாறி விட்டார் போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டார்.
அவ்வப்போது கூட்டமைப்பின் தலைமை மற்றும் சில எம்பிகளை மறைமுகமாக விமர்சித்து மேலும் மேலும் தனக்கான கை தட்டல்களை உயர்திக்கொண்டார்.
ஆனாலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? என்று கேள்விகள் எழுப்பிய போதெல்லாம் ராஜினி எப்படி மழுப்பலான பதில் கூறி தப்பினாரோ அதே மாதிரி கூட்டமைப்பிலிருந்து விலகுவாரா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கு மழுப்பலாக பதிலளித்து வந்தார்.
ஆனால் இது நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஈழ மக்கள் தமிழக மக்கள் மாதிரி அல்ல. பல நாளைக்கு உந்த விளையாட்டு விளையாட முடியாது என்று தெரிந்த விக்கி ஐயா மாகாண சபை ஆட்சி காலம் முடிவடைந்த பின் தொடர போகும் அரசியல் கூட்டமைப்புடன் இல்லை என்று அறிவித்தார்.
இன்று 79 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு இன்று தான் முதலமைச்சராக இருக்கும் கடைசி நாளும் கூட. ஆம் இன்றுடன் அவரது முதலாவது ஆட்சி காலம் முடிவடைகிறது.
நாளை தனது எதிர்கால அரசியல் பற்றிய அறிவித்தல் விட இருக்கிறார்.
சரி பிழைகளுக்கு அப்பால் சர்வதேச ரீதியாக தமிழ் மக்களின் உரிமை குரலை கேட்க வைத்ததிலும், தமிழ் மக்களிடையே தமிழ் தேசிய உணர்வை தக்க வைத்ததிலும் அவரது வகிபாகம் முக்கியமானது.