சி.வி.க்கு மனசாட்சி என்பதே இல்லை!

சி.வி.க்கு மனசாட்சி என்பதே இல்லை!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மனசாட்சி இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு மனச்சாட்சி இல்லை என்பதை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் ஊடாக அவர் வெளிப்படுத்திவிட்டார் என வட. மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வட.மாகாணசபையின் இறுதி அமர்வு நேற்று(செவ்வாய்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே அவைத் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் நான் பல விடயங்களுக்குத் தடையாக இருக்கிறேன் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

அதற்கு சில தினங்களுக்கு முன்னர் நான் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் முதலமைச்சர் என்னை தவறாக விமர்சிக்க மாட்டார். அவருக்கு மனச்சாட்சி இருக்கிறது. அதனை நான் நம்புகிறேன் என கூறியிருக்கின்றேன்.

ஆனால் முதலமைச்சருக்கு மனச்சாட்சியே இல்லை என்பதை தனது பிரத்தியேக செவ்வி ஊடாக வெளிப்படுத்திவிட்டார். வட. மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சகல நியதிச்சட்டங்களும் பாரிய பிழைகளுடன் வந்தன.

அத்தனை நியதிச்சட்டங்களையும் இரவு, பகலாக பல்வேறு நெருக்கடிகள், துன்பங்களுக்கு மத்தியில் படித்து திருத்தியமைத்தவன் நான். 2013ம் ஆண்டு வட. மாகாணசபை பொறுப்பேற்று சிறிது நாட்களில் 2014ம் ஆண்டுக்கான பாதீடு ஆளுநரின் அங்கீகாரத்துடன் வந்தது.

மோசமான பிழைகளுடன் அந்த பாதீடு தயாரிக்கப்பட்டிருந்தது. அப்போது இந்த சபையை குழப்ப ஒரு குழு இயங்கிக் கொண்டிருந்தது. அதனை அறிந்து நான் பிரதம கணக்காளர் பத்மநாதனை அழைத்து அந்த பாதீட்டில் இருந்த பாரிய மோசமான பிழைகளை திருத்தியமைத்தேன்.

பாதீடு சபையில் அங்கீகரிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் நவம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் முதலமைச்சர் பாதீட்டில் வோறன்ட் கையொப்பம் இடவேண்டும். ஆனால் முதலமைச்சர் கொழும்பு சென்றுவிட்டார்.

உடனடியாகவே நான் எனது சொந்த வாகனத்தில் கொழும்புக்குச் சென்று அதில் கையொப்பம் பெற்றுக் கொண்டு வந்து சமர்பித்தேன். மோசமான விளைவுகளை அன்று நான் தடுத்தேன். இதற்காக எனக்கு முதலமைச்சர் கொடுத்த கௌரவமே நான் பல விடயங்களுக்கு தடையாக இருந்தேன் என்ற கருத்து.

நான் இந்த சபையில் அவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தபோது எனக்கு கஷ்டமாக இருக்கவில்லை. காரணம் எனக்கு நடைமுறைகள், ஒழுங்குகள் அனைத்தும் தெரிந்திருந்தது.

ஒருகாலத்தில் முக்கியமான இயக்கம் ஒன்றின் தலைவரால் வடகிழக்கு இணைந்த சபைக்கு தலைவராக பிரேரிக்கப்பட்டவன் நான். மாகாணசபை முறைமை எனக்கு புதியதல்ல“ என தெரிவித்துள்ளார்.

Copyright © 5263 Mukadu · All rights reserved · designed by Speed IT net