முல்லையில் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பான கூட்டம்!
முல்லைத்தீவு மாவட்ட காணி தொடர்பிலான கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இக்கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, படையினர் தங்கள் வசமுள்ள காணிகளின் விபரங்களையும் காணிகள் விடுவிப்பதில் உள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாட்டினையும் தெரிவித்து வந்தவேளை வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஊடகவியலாளர்களை ஒளிப்பதிவு செய்யவேண்டாம் என அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து வட. மாகாண ஆளுநரும் ஊடகவியலாளர்களை ஒளிப்பிடம் எடுக்கவேண்டாம் கூட்டம் முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதாக தெரிவித்து ஊடகவியலாளர்களை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளார்கள்.
எனினும் கூட்டம் நிறைவடைந்த நிலையில் ஆளுநர் ஊடகங்களுக்கு எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மாவட்ட செயலகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இதன்பின்னர் மக்கள் பிரதிநிதிகள் சிலர் கூட்டத்தில் கதைக்கப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்கள்.
குறித்த கூட்டத்தில், முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ராஜகுரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்லம் அடைக்கலநாதன், சி.சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராசா, சிவசக்தி ஆனந்தன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் மற்றும் ஆளுநரின் செயலாளர், பிரதேச செயலாளர்கள் மாவட்ட காணித்திணைக்கள அதிகாரிகள், பிரதேச காணி திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட பொலிஸ் அதிகாரி, கடற்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.