கொட்டகலையில் ஹர்த்தால் – மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு!
தோட்டதொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி கொட்டகலை நகரில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக அணிதிரண்ட கொட்டகலை பிரதேச தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக கொட்டகலை நகருக்கு வந்து பிரதான வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி மற்றும் வேன் சாரதிகள், இளைஞர், யுவதிகள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொட்டகலை நகர வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்களை மூடி ஆதரவு வழங்கியதோடு, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.