துறவிகளாக மாறும் பிரபல தொழிலதிபர்களின் மகள்கள்!

துறவிகளாக மாறும் பிரபல தொழிலதிபர்களின் மகள்கள்!

திருவண்ணாமலை பிரபல தொழிலதிபர்களின் மகள்கள் இருவர் துறவிகளாக மாறவுள்ளார்கள். இதற்காக இவர்களை வழியனுப்பும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலையில் முதன் முறையாக ஜெயின் மதத்தில் துறவறம் செல்வது இவர்கள் தானாம். இதையடுத்து நவம்பர் மாதம் 11 ஆம் திகதி சென்னை மாதவரத்தில் இவர்களின் குரு ஆச்சார்யா ஸ்ரீமகாஸ்ரமன் ஆசியோடு ஆன்மிக வாழ்க்கையில் பயணம் செல்லவுள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலதிபர்களான கவுதம்குமார் மற்றும் அரவிந்த் குமார் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதுடன் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள்.

கவுதம்குமாருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களில் 2 ஆவது மகள் பிரெக்ஷா (வயது 26) என்பவரும், அரவிந்த் குமாரின் 3 பிள்ளைகளில் 2 ஆவது மகள் ஸ்வேதா (26) என்பவருமே இவ்வாறு துறவறம் செல்லவுள்ளனர்.

இதுகுறித்து அவர்களின் தந்தையர்களிடம் கேட்டபோது,

“எங்களது மகள்கள் இருவரும் பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். பிரெக்ஷா எம்.பி.ஏ. படித்துள்ளதோடு ஸ்வேதா சி.ஏ. படித்துள்ளார்.

இருவரும் 22 வயது இருக்கும்போது ஜெயின் மதத்தில் துறவறம் போகப்போவதாக கூறினர். நாங்கள் அதை முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் துறவறம் செல்வதிலேயே உறுதியாக இருந்தனர்.

எனினும் எங்களது கண்ணீர் அவர்கள் மனதை மாற்றவில்லை. அன்பாகவும், மிரட்டியும் பார்த்தோம் எனினும் அவர்கள் இருவரும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

துறவறம் செல்வது என்பது சாதாரண வி‌டயம் அல்ல. அதில் முட்பாதைகள் அதிகம், கட்டுப்பாடுகள் அதிகம் என்று எடுத்துக்கூறியும் அவர்கள் தங்களது முடிவை மாற்றி கொள்ளவில்லை. பின்னர் நாங்கள் அவர்களின் முடிவை ஏற்றுக்கொண்டோம்.

துறவறம் செல்ல வேண்டும் என்றால் அதற்கான எம்.ஏ.ஜெயினினாலஜி படிக்க வேண்டும். அவர்களை ராஜஸ்தானில் உள்ள மத கல்லூரியில் சேர்த்தோம்.

படிக்கும் போது அவர்களின் மனநிலையை மூத்த துறவிகள் ஆராய்ந்து இருவரும் துறவறத்திற்கு தகுதியானவர்கள் என்று சான்று அளித்தனர்.

ஜெயின் மதத்தில் துறவிகள் ஆக வேண்டும் என்றால் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தங்களது துணிகளை தாமே சுமக்க வேண்டும். எங்கு சென்றாலும் நடந்தே செல்ல வேண்டும். பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் உணவு உண்ணக்கூடாது. 3 ஆடைகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

குடும்பத்தினருடன் பாசப்பிணைப்பு இருக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒருமுறை தங்களது தலைமுடியை தாங்களாகவே எடுத்துவிட வேண்டும். வெயிலோ, மழையோ, குளிரோ வேறு உடைகளை அணியவே கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது. இவை அனைத்தையுமே எங்களது மகள்கள் ஏற்றுக்கொண்டனர். சிறுவயதில் இருவரும் பெண் துறவிகளுக்கு சேவகம் செய்யும் போது, துறவி ஆக வேண்டும் என்ற எண்ணம் பிறந்துள்ளது” என்று குறிப்பிட்டனர்.

திருவண்ணாமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் இவர்களை வழியனுப்பும் விழாவில் மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆளுநர், பொலிஸ் தலைமை அதிகாரி, அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள் உட்பட பலர் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 5696 Mukadu · All rights reserved · designed by Speed IT net