நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் யுத்தம், சுனாமி, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்கள் நிலவிய காலப்பகுதியில் எதுவித வேதனமும் இன்றிக் கடமையாற்றியதுடன், ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய அரசாங்கப் பாடசாலைகளில் சுமார் 15 முதல் 20 வருடங்கள் கடமையாற்றிய தமக்கு இதுவரையில் நிரந்த நியமனம் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், அண்மையில் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த 1050 ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் நடாத்தப்பட்டு அதில் 456 பேர் தெரிவு செய்யப்பட்டபோதிலும் தமக்கான நிரந்ததர நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை ஆர்ப்பாட்டத்தினை கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.