மாவீரர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விடுமுறை ரத்து?
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வட மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்வது உசிதமானது என வடக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
நவம்பர் மாதத்தில் வடக்கின் அனைத்து பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆயத்தமாக வைத்திருப்பதற்கு உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் 26ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் என்பதுடன், 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் மாவீரர் தின வாரமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரகடனம் செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டல்களின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கலில் விசேட நினைவேந்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் நடைபெறவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளில் முன்னாள் போராளிக் குடும்பங்களை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் காலப் பகுதியில் வடக்கில் பல்வேறு நாச வேலைகள் இடம்பெறக் கூடும் என்ற காரணத்தினால், வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையை ரத்து செய்வது குறித்து உயர் பொலிஸ் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர் என பிரதான சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.