ஊடகவியலாளர்களுக்கு அப்பிள் கடிகாரம் வழங்கப்பட வேண்டும்!
சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
கொழும்பில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை இணையத்தள ஊடகவியலாளர்கள் சங்கம் உட்பட சிவில் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள சவுதி தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவிக்கையில்,
லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னேலிகொட ஆகியோருக்கு நடந்தவற்றை பார்க்கும் போது இந்த அனுபவம் என்பது இலங்கைக்கு புதிதல்ல.
யார் இப்படியான கொலைகளை செய்தாலும் அவற்றை நாங்கள் கண்டிக்கின்றோம். சவுதி இளவரசர் பின் சல்மான் இதனை செய்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை.
வரி மோசடி செய்த இளவசர்களை சிறை வைத்தார். பல முற்போக்கான தீர்மானங்களை எடுத்தார். அப்படி செய்த பின் சல்மான், தன் மீதான விமர்சனத்தை பொருத்து கொள்ள முடியாது இப்படியாக கொலையை செய்தார் என்பதை எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க, ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அப்பிள் கடிகாரம் வழங்கப்பட வேண்டும்.
அப்பிள் கடிகாரம் காரணமாகவே கஷோக்கியின் கொலை சம்பந்தமான தகவல்கள் வெளியில் தெரிந்தது.
இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இப்படியான கொடுமைகள் நடக்காது என்பதை உறுதியாக கூற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.