விக்னேஸ்வரனின் அரசியல் தலைவிதியை மக்களே நிர்ணயிக்க வேண்டும்!
சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியின் அரசியல் தலைவிதியை மக்களே நிர்ணயிக்க வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அதேநேரம், இனவாதக் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் கூட்டணி அமைத்துக்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், விக்னேஸ்வரன் என்பவர் ஒரு இனவாதி என எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
நாம், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தான் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோமே தவிர அவருடன் அல்ல.
இந்நிலையில், ஒரே கட்சியாக இருந்தவர்கள் பிரிந்து சென்று தனிக்கட்சியொன்றை ஆரம்பித்தமையானது அவர்களின் தனிப்பட்ட செயற்பாடாகும். அதில், தலையிட வேண்டிய அவசியம் எமக்கில்லை.
இறுதியில் மக்களின் வாக்குகள் தான் அந்தக் கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
எவ்வாறாயினும், இனவாதக் கட்சிகளை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதே இல்லை. இவ்வாறான கட்சிகள் வடக்கில் மட்டுமன்றி, தெற்கு மற்றும் கிழக்கிலும் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய கட்சி என்றவகையில், ஒருபோதும் இனவாதிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது.
அத்தோடு, இந்த நாடானது அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான ஒரு நாடாகும். எந்தவொரு மக்கள் கூட்டமும் இந்த இடத்தில் தான் இருக்கவேண்டும் என இந்த நாட்டில் எந்தவொரு நியதியும் இல்லை. இதனை முதலில் அனைவரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
இனவாத செயற்பாடுகளில் ஈடுபட மட்டுமே தடை உள்ளதேயொழிய, எங்கு வேண்டுமானாலும் சென்று தொழில் செய்ய அனைவருக்கும் உரிமையுள்ளது.
புலிகள் இல்லாத காலத்தில் வடக்கில் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்தார்கள் என்பதையும் யாரும் மறந்துவிடக் கூடாது” என்று தெரிவித்தார்.