ஆட்சியை பிடிக்க முற்பட்டவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைத்துள்ளது!

ஆட்சியை பிடிக்க முற்பட்டவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைத்துள்ளது!

அ.தி.மு.க.வை களைத்து ஆட்சியை பிடிக்க முற்பட்டவர்களுக்கு, இறைவன் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை – சிங்கா நல்லூரில் இடம்பெற்ற திருமணவிழா ஒன்றில் பங்கேற்ற பின்னர், அங்கு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் ஆட்சியை களைக்க வேண்டும் என்றே கூறி வருகிறார். அவருக்கு கதிரை மீது தான் ஆசையே தவிர மக்கள் குறித்து அக்கறை இல்லை.

உயர்நீதிமன்றின் தீர்ப்பின் மூலம், தி.மு.க.வினருக்கு தகுந்த பதிலடி கிடைத்தது. உண்மையும் நியாயமும் தான் எப்போதும் வெல்லும்” எனக் கூறியுள்ளார்.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணன் அண்மையில் தீர்ப்பு வழங்கினார்.

அதில், 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தமை நியாயமானதே என உத்தரவிட்டுள்ளார்.

இதனால் குறித்த 18 உறுப்பினர்களின் தொகுதிகள் மற்றும் திருவாவூர், திருப்பெரும்குன்றம் ஆகிய இரு இடங்கள் உள்ளடங்களாக, மொத்தம் 20 இடங்களில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில், தேர்தலை விரைந்து நடத்துமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறான நிலையில், எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்த வாய்ப்புள்ளதாக, தமிழக தேர்தல்கள் ஆணையர் நேற்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறான, தேர்தல்கள் நெருங்கிவிட்ட நிலையில், கட்சி தலைமைகளின் பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 4923 Mukadu · All rights reserved · designed by Speed IT net