சிங்களவர்கள் தமிழ் இன அழிப்பையே நோக்காக கொண்டவர்கள்!

சிங்களவர்கள் தமிழ் இன அழிப்பையே நோக்காக கொண்டவர்கள்!

சிங்களர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தமிழ் இன அழிப்பையே நோக்கமாகக் கொண்டவர்கள் என்பதும், தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதும் உண்மையென ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான ஈழத்தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய கொடிய குற்றவாளியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஹ் காணப்படுகிறார் என்பதை, ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் 2010 நியமித்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை உலகத்துக்கு அம்பலப்படுத்தியது.

குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை, ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர்.

ஹிட்லரின் நாஜிகள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய படுகொலைகளுக்குப் பின்னர், ராஜபஹ்ஷ அரசு நடத்திய இனப்படு கொலையில், கர்ப்பிணித் தாய்மார்கள் கொல்லப்பட்டமை, எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை, ஏராளமான இளைஞர்கள் சித்திரவதை செய்து அழிக்கப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்கது.

இந்த இனப்படு கொலையை இலங்கை அதிபர் பொறுப்பில் இருந்த ராஜஹ்ஸ நடத்தியபோது, அதனைச் செயல்படுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர்தான் மைத்திரிபால சிறிசேனா ஆவார். இருவருமே தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளிகள் ஆவார்கள்.

கடந்த 2015 தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனா ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தினார்.

ஈழத் தமிழ் இனத்தையே கருவறுத்துப் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வன்மம் கொண்டவர்தான் ராஜபஹ்ஸ என்பதை மானத் தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

இலங்கை அரசியலில் நடைபெறுகிற சதுரங்கப் போட்டியில், சிங்கள அரசியல்வாதிகள் அனைவருமே ஈழத்தமிழ் இனத்தின் தனித்தன்மையை அழிக்கும் குறிக்கோளைக் கொண்டவர்கள்தான்.

மாலைத்தீவு தேர்தலில் நடைபெற்ற அதிகார மாற்றத்தால் ஆத்திரமடைந்த சீனா, இலங்கையில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஏற்கனவே அம்பான்தோட்டை துறைமுகத்தைப் பெற்றதோடு, மீண்டும் ராஜபஹ்ஸ கைகளில் அதிகாரம் வரவேண்டும் என்று திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது.

தமிழ் இனக்கொலையாளி ராஜபஹ்ஸ இந்தியாவுக்கு வந்து, பிரதமர் மோடியைச் சந்தித்ததும், மூன்று நாட்கள் டெல்லியில் முகாமிட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இலங்கை அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் படி, ராஜபஹ்ஸ நியமனம் செல்லாது என்றும், தானே பிரதமர் என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறி இருக்கிறார்.

எது எப்படி இருப்பிலும் சிங்களர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழ் இன அழிப்பையே நோக்கமாகக் கொண்டவர்கள் என்பதும், தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதும் உண்மையாகும்.

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நரேந்திர மோடி அரசு தொடக்கத்திலிருந்தே மனித உரிமைக் கவுன்சிலிலும், ஈழத்தமிழர்கள் குறித்த அனைத்துப் பிரச்சினைகளிலும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே நடந்து வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Copyright © 1544 Mukadu · All rights reserved · designed by Speed IT net