இலங்கையின் அரசியல் மாற்றம் குறித்து அவதானம்!
இலங்கையில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரதமர் பதவி தொடர்பான சர்ச்சைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் குறித்து இந்திய அரசு தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் ரவீஷ்குமார் தெரிவிக்கையில்,
”இலங்கை நெருங்கிய அயல்நாடு என்ற வகையில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு செயல்முறைகள் மதிக்கப்படும் என்று நம்புகிறோம்.
இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா எப்போதும் தயராக இருக்கிறது. இந்நிலையில் இலங்கை அரசாங்கமும் அதன் நீதி நிர்வாகக் கட்டமைப்பும் இச்சந்தர்ப்பத்தில் நடுநிலைமையுடன் செயற்படும் என இந்தியா எதிர்பார்க்கின்றது.
இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரண நிலைகளின்போது பொதுமக்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.