இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றார்!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரதமர் செயலகத்தில் சற்றுமுன் அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை ஜனாதிபதியாக இரு தடவைகள் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் சர்வதேச அளவில் பேசப்பட்ட தலைவராக காணப்படுகிறார்.
கடந்த 1945ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 1970ஆம் ஆண்டு முதற்தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
அதன் பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதிமுதல் பிரதமராக பதவி வகித்த அவர், 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அவருடைய முதற்தவணைக் காலத்தில் அதாவது 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்தது.
யுத்த வெற்றியை தனதாக்கிய மஹிந்த, அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
இரண்டாவது தவணைக் காலத்தில் பல எதிர்ப்புகளை சம்பாதித்துக்கொண்ட அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவியை குறிவைத்து மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டபோதும், அதற்கான பெரும்பான்மை கிடைக்காமல் போனது.
எனினும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் நாடாளுமன்றில் காலடி எடுத்துவைத்த மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டார். அவருக்கு ஆதவராக நல்லாட்சி அரசாங்க அதிருப்தியாளர்கள் ஒன்றிணைந்தனர்.
இவ்வாறு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்தது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற, நல்லாட்சி அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பித்தது.
இதற்கிடையில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைசெய்ய திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான செய்திகளின் பின்னர் அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறியது. அதன் பின்னர் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரியின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஏற்கனவே மஹிந்த ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் மைத்திரி அமைச்சராக செயற்பட்டார். தற்போது, மீண்டும் இருவரும் இணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.