மைத்திரிபால அரசியலமைப்பிற்கு முரணாகவே செயற்படுகின்றார்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொடர்ச்சியாக அரசியலமைப்பிற்கு முரணாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாடாளுமன்றத்தை கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மூன்றுப் பிரதானக் கட்சிகளும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டமாறு ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய மூன்றுப் பிரதானக் கட்சிகளும் சபாநாயகரிடத்தில் உத்தியயோகபூர்வமாக கேட்டுக்கொண்டுள்ளன. சர்வதேச நாடுகளும் இதனைத்தான் வலியுறுத்தியுள்ளன.
ஆனால், இதனை மேற்கொள்ளாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொடர்ச்சியாக அரசியலமைப்பிற்கு முரணாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை அரசமைப்புக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகும். எனவே, இதனை நாடாளுமன்றில் மட்டுமே தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
இதனை வலியுறுத்துவதற்காகத் தான் நாளை கொழும்பில், பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நாம் மேற்கொள்ளவுள்ளோம்.
நாம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ளவோ இந்த செயற்பாட்டை மேற்கொள்ளவில்லை.
மாறாக, நாட்டின் ஜனநாயகத்தையும், சட்டத்தையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்கவே இவ்வாறு செயற்படுகிறோம். இதற்கு, அனைவரும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
மஹிந்த தரப்பினர் இப்போதே ஊடாக அடக்குமுறையை ஆரம்பித்து விட்டார்கள். இதற்கெதிராகத்தான் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சிக்கு வாக்களித்த அனைத்து மக்களையும் நாளை ஒன்றிணையுமாறு நாம் அழைக்கிறோம்.
நிச்சயமாக நாம் நாடாளுமன்றில் எமது பெரும்பான்மையை நிரூபிப்போம். இதனைத் தொடர்ந்து இவ்வாறான சட்டவிரோதமான அரசமைப்புக்கு முரணாக செயற்பட்ட அனைவருக்கு எதிராகவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.” என கூறினார்.