வடமராச்சியில் வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் பலி!
யாழ்ப்பாணம்- குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த சந்தேகநபர் அவ்வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு, குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றினுள் அதிகாலை 12 மணியளவில் புகுந்த தாக்குதலாளி, வீட்டில் உறக்கத்தில் இருந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) மற்றும் அவரது மனைவி ப.நிர்மலாதேவி (வயது 53) ஆகியோர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதில் பரம்சோதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பத்தை தொடர்ந்து குறித்த தாக்குதலாளி, அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலுள்ள தனது மாமனார் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த தனது மாமனார் மற்றும் மாமியார் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்து சென்ற தாக்குதலாளி பின்னர் அப்பகுதிகளில் நடமாடி திரிந்த வேளை அயலவர்கள் மின் குமிழ்களை ஒளிரவிட்ட போது, மின்குமிழ்களை அணைக்குமாறு கூறியுள்ளார்.
அயலவர்கள் இராணுவம் அல்லது பொலிஸாராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மின்குமிழ்களை அணைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இறுதியாக தாக்குதல் நடத்திய வீட்டில் இருந்து சற்று தொலைவிலுள்ள வீடொன்றுக்குள் தாக்குதல் நடத்தும் நோக்குடன் தாக்குதலாளி உட்புகுந்த வேளை, வீட்டார் விழிப்பாக இருந்தமையால் தாக்குதலாளியை அடையாளம் கண்டு விசாரிக்க முற்பட்ட வேளை தாக்குதலாளி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
அதன் பின்னர் அயலிலுள்ள வீடுகளில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றமை அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
பின்னர் தாக்குதலுக்கு இலக்கானவர்களை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த தாக்குதலாளி அப்பகுதியை சேர்ந்த தர்சன் எனவும், அவர் தாக்குதலுக்கு இலக்கான சித்திர வடிவேல் என்பவரின் மகளை திருமணம் முடித்து ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும், போதை பாவனைக்கு அடிமையானவர் என்பதனால் வீட்டில் குடும்ப தகராறுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை தாக்குதலாளி தாக்குதல் மேற்கொள்ளும் போது போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அதிகாலை 4.30 மணியளவில் தகவல் வழங்கிய போதிலும் பொலிஸார் காலை 8 மணிக்கே வருகை தந்தனரென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.