அதிகாரத்தை கையில் எடுக்க ஜனாதிபதிக்கு இடமளிக்க போவதில்லை!
நாடாளுமன்றத்தை ஒரு புறம் ஒதுக்கி தள்ளிட்டு விட்டு நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுக்க ஜனாதிபதிக்கு இடமளிக்க போவதில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெறும் நியாயத்தின் மக்கள் குரல் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அலரி மாளிகையை ஜனநாயகத்தின் அடையாளமாக மாற்றி, நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை உறுதிப்படுத்திய உடன் அரசாங்கம் என்ற வகையில் நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்வோம்.
மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆணையை காட்டிக்கொடுத்தமை மிகவும் மோசமான செயல் என்றே கூறவேண்டும்.
அந்த மோசமான செயலை செய்ய நாம் இடமளிக்க மாட்டோம். இந்த மேடையில் பல இனங்கள் மற்றும் மதங்களை சேர்ந்த தலைவர்கள் இருக்கின்றனர்.
கொள்ளுப்பிட்டியில் இந்த மூலையில் இருந்து அடுத்த மூலைக்கு செல்லும் அளவில் பெரும் மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி என்ற ரீதியில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, அபிவிருத்தி யுகத்தை ஏற்படுத்தவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.
இதன் பின்னர் நல்லிணக்கத்துடன் கைகளை கோர்த்த பயணத்தை ஆரம்பிப்போம்.
அன்று எதிர்க்கட்சியில் இருந்து மூன்று பிரதான கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் இணைந்து, ஜனாதிபதித் தேர்தலை ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தினோம்.
அப்போது பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானித்தோம். அப்போது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள், அமைப்புகள் எங்களுடன் இணைந்துக்கொண்டன.
இறுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் யோசனையை கவனத்தில் கொண்டு சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என தீர்மானித்தோம்.
இது சம்பந்தமான யோசனையை நான் ஐக்கிய தேசியக்கட்சியின் மாநாட்டில் கொண்டு வந்து நிறைவேற்றினேன். நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் இணைந்து செயற்பட்டோம்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாம் சிறை செல்ல நேரிட்டது. உயிர்களை தியாகம் செய்ய நேரிட்டது. கண்ணீர், வியர்வை சிந்தி போராடினோம்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானார்.
அதற்கு அமைய நானள் பிரதமராக நியமிக்கப்பட்டேன். இந்த மக்கள் ஆணையானது எமக்காக கிடைத்த ஆணையல்ல. நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து உறுதிப்படுத்த கிடைத்த மக்களின் ஆணை.
மக்களின் இந்த ஆணையை பாதுகாக்க நாங்கள் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தோம். சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தோம். அமைதியான முறையில் இரண்டு தேர்தல்களை நடத்தினோம்.
ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தினோம். மக்கள் அச்சமின்றி வாழவும் அரசாங்கத்தை விமர்சிக்கவும் பின்னணியை உருவாக்கி கொடுத்தோம்.
பெற்றுக்கொடுத்த ஜனநாயகத்தையும் மக்களின் ஆணையையும் நாடாளுமன்றத்தின் சுயாதீப்பத்தியத்தையும் பாதுகாக்க நாங்கள் முக்கியத்துவத்தை கொடுத்தோம்.
அதனை நாம் முன்னெடுத்துச் சென்றோம். நாட்டின் நாடாளுமன்றம் காரணமாகவே மக்கள் சர்வஜன வாக்குரிமையையும் ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்த உரிமைகளை பாதுகாக்கவே நாங்கள் முன்னோக்கி சென்றோம். எனினும் துரதிஷ்டவசமாக நாம் எண்ணிப்பார்க்காத தருணத்தில் மைத்திரிபால சிறிசேன, மக்களின் ஆணையை உடைத்து, நாடாளுமன்றத்தை புறம் தள்ளி விட்டு, மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுக்க முயற்சித்து வருகிறார்.
இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். அதற்கு இடமளிக்க மாட்டோம். தாம் அர்ப்பணிப்புடன் உருவாக்கிய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
வெள்ளிக் கிழமை மாலை இந்த செயலை செய்த பின்னர் திங்கள் கிழமை எம்மை சிறை கைதிகளாக எதுவுமற்றவர்களாக காண அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
எனினும் இந்த சதித்திட்டத்திற்கு இடமளிப்பதில்லை என நாங்கள் முடிவு செய்தோம். இதனால், மக்கள் ஒன்று கூடும் வரை அலரி மாளிகையை ஜனநாயகத்தின் அடையாளமாக மாற்றினோம். இங்கு வந்து எமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசிய முன்னணி மட்டுமல்லாது ஏனைய கட்சிகளும் ஒரே குரலில் கோரிக்கை விடுத்தன.
நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு பதிலாக ஒத்திவைத்தனர். இந்த பிரச்சினையில் இருந்து தப்பிச் செல்ல அவர்கள் முயற்சித்தனர். அதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.
ஒரு புறம் நாட்டு மக்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கின்றது என்று கேட்கின்றனர்.
என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்கின்றனர். மக்கள் முற்றாக நம்பிக்கையிழந்துள்ளனர் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.