இலங்கை சர்வதேச சலுகைகளை இழக்கும்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி செயற்பாட்டினால், இலங்கைக்கான சர்வதேச சலுகைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்: ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியலமைப்பிற்கு எதிரான ஜனாதிபதியின் செயற்பாட்டை வெளிநாட்டு இராஜதந்திரிகள் கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில், இதனால் ஜி.எஸ்.பி வரிச்சலுகை உள்ளிட்ட சர்வதேச சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வெள்ளிக்கிழமை பிரதமராக நியமித்தார்.
இந்த விடயம் இலங்கை அரசியலில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.