கருணாநிதியின் சிலையை நிறுவுவதற்கு நிபந்தனையுடன் அனுமதி!
மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலையை சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நிறுவுவதற்கு மாநகராட்சி நிபந்தனையுடன் அனுமதியளித்துள்ளது.
கருணாநிதியின் சிலையை நிறுவுவதற்கு தெரிவுசெய்யப்பட்ட இடம், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உரித்துடையது என்பதால் தி.மு.க. சார்பில் அனுமதி கேட்டு மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்ணா அறிவாலய வளாகத்தில் கருணாநிதியின் சிலை வைப்பதற்கு மாநகராட்சி நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்க்காலத்தில் சாலை விரிவாக்கத்துக்காக அந்நிலம் தேவைப்படும் பட்சத்தில் சிலை அகற்றப்படுமென நிபந்தனையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருவள்ளூர் மாவட்டம், புதுப்பேடு கிராமத்திலுள்ள பிரபல சிற்பி தீனதயாளனிடமே கருணாநிதியின் சிலையை வடிவமைக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது. தற்போது அதன் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை கருணாநிதி சிலை திறப்பு விழாவை அவர் மறைந்து 100ஆவது நாளான எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி நடத்துவதற்கு தி.மு.க. திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.