நீரிழிவு நோயால் ஒவ்வொரு வாரமும் 500 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்திலும் வேல்ஸிலும் ஒவ்வொரு வாரமும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 500 பேர்கள் உயிரிழப்பதாக தொண்டுநிறுவனமொன்று எச்சரித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை உரிய நடவடிக்கைகளின் மூலம் தவிர்க்கப்படக் கூடியவை எனவும் நீரிழிவு நோய்க்கான இத்தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயாளர்கள் தமது நோயைத் திறம்பட நிர்வகிக்கத் தேவையான உதவிகளை வழங்கும்பட்சத்தில் அவர்களை அதிகளவில் பாதிக்கும் பார்வை இழப்பு, சிறுநீரகநோய், பக்கவாதம் மற்றும் இதயநோய் ஆகியவற்றை தடுக்க முடியுமென இத்தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
மரணத்துக்கு வழிவகுக்கக் கூடிய நீரிழிவு நோயின் பொதுவான சிக்கல்கள் பக்கவாதம் மற்றும் இருதயநோய்கள் ஆகும். இங்கிலாந்தில் ஒவ்வொரு வாரமும் 680 பேர் நீரிழிவு நோயால் ஏற்படும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு தொடர்பான மாரடைப்பு 530 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 2000 பேருக்கு நீரிழிவு தொடர்பான இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இத்தோடு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கிலாந்தில் நீரிழிவு நோயாளிகளை கவனித்தலை மேம்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு முதல் தேசிய சுகாதார சேவையின் நீரிழிவு மாற்ற அமைப்பு £80 மில்லியனை முதலீடு செய்துள்ளது.
நீரிழிவு நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் அளவைக் குறைப்பதற்கும் நீரிழிவு நோயாளர்களின் சிகிச்சை தரங்களை மேம்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை தேசிய சுகாதார சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டுமென நீரிழவு நோய்க்கான தொண்டுநிறுவனம் வலியுறுத்தியுள்ளது.