மன்னார் வீடொன்றுக்குள் அதிரடிப் படையினர்!
மன்னார் எழில் நகரிலுள்ள வீடொன்றுக்குள் ஆயுதங்களை தேடி அதிரடிப் படையினர் மேற்கொண்ட அகழ்வுப் பணிகள் தோல்வியடைந்துள்ளன.
கொழும்பிலிருந்து மன்னாருக்கு விரைந்த அதிரடிப் படையினர் நேற்று (திங்கட்கிழமை) குறித்த வீட்டின் சமையலறை பகுதியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் குறித்த வீட்டிற்கு விசேட அதிரடிப்படையுடன் சென்று சோதனைகளை மேற்கொண்டதுடன், குறித்த வீட்டின் சமையல் அறைப்பகுதியையும் கடுமையாக தோண்டி சோதனையிட்டனர்.
மாலை 7 மணிவரை அகழ்வுப் பணிகள் நீடித்திருந்த போதிலும், எவ்வித வெடிப்பொருட்களும் கண்டு பிடிக்கப்படவில்லை.
கடந்த 2007ஆம் ஆண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீட்டில் தாயும் இரண்டு குழந்தைகளும் வசித்து வருகின்ற நிலையில், கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.