நான் எப்படி துரோகம் செய்துள்ளேன்?

நான் எப்படி துரோகம் செய்துள்ளேன்?

நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதுவித குழப்பமும், அச்சமும் கொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கிழக்குப் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியை பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்றைய தினம் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், தமிழ் மக்கள் மீது வைத்துள்ள தூரநோக்குடைய சிந்தனையின் அடிப்படையில் தான் நான் நாடாளுமன்ற பதவியை வைத்துக் கொண்டு அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளேன்.

மாறாக கதிரையை சூடாக்கி வைப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனியும் வேடிக்கை பார்த்து இருக்க முடியாது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில் தெளிவான சூழ்நிலையில் தமிழர்களுக்கு பல்வேறுபட்ட விடயங்களில் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கும், அமைச்சுப் பதவியை பாரமெடுத்துள்ளேன்.

பல பேர் துரோகம் என்கிறார்களே, நான் எப்படி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளேன். தமிழரின் காணிகள் ஏனைய சமூகத்தால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்படும் போது தன்னம்தனியாக குரல் கொடுத்தேன்.

அப்போது இருந்த ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். இன்று வரை மட்டக்களப்பில் காணி பிடிபட்டே கொண்டிருக்கிறது.

தமிழர்களின் காணிகளை யார் தடுப்பார்? காரணம் தமிழர்கள் மத்தியில் சாணாக்கியமுள்ள அரசியல் பலமில்லை.

முறாவோடை காணிகள், பாடசாலை மைதான காணிகள், வாலமன்கேணி, தளவாய், மஞ்சந்தொடுவாய், உள்ளிட்ட காணிகள் துணிச்சலுடன் பிடிக்கப்படுகின்றன.

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை வலுக்கட்டாயமாக அரசியல் பலத்தின் மூலம் அமைத்த போது தனியாக நின்று நானே எதிர்த்தேன். அப்போது ஏனையவர்கள் எங்கே போனார்கள்?

கிழக்கில் இருந்தவர்கள் ஏன் இவ்விடயத்தில் மௌனமானர்கள்? எதிர்கட்சி தலைவருக்கு இல்லாத அதிகாரமா? ஏன் மௌனம் காத்தார்கள்? ஒரு சத்தமிட்டாலே நாடாளுமன்றம் கேட்கும் என்றால் ஏன் கேட்கவில்லை?

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் நன்மைக்காகவும், இருப்புக்காகவும் ஜனாதிபதியிடம் தனியாகவும், எதிராகவும் நான் தான் மகஜர் கொடுத்தேன்.

இது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புலப்படாது. எனவே கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

வரும் அரசை எதிர்ப்பார்கள். ஆனால் வரவு செலவு திட்டம், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு கொடுப்பார்கள். இது துரோகமில்லையா தமிழ் மக்களே.

நான் அமைச்சு பதவி எடுத்தது எனது குடும்பத்துக்கல்ல. கிழக்கில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.

ஒட்டு மொத்தத்தில் எதிர்கட்சி பதவியில் இருப்பதை விட அமைச்சு பதவி எடுத்து வேலைதிட்டங்கள் செய்வது சிறப்பானதாகும்.

நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதுவித குழப்பமும், அச்சமும் கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net