கடந்தகால வரலாற்றிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாறவேண்டும்!
கடந்த காலத்திலிருந்து வந்த வரலாறை மாற்றி நாட்டில் தமிழர்களுக்கான சாதகமான சூழலை ஏற்படுத்தக்கூடிய அரசின் பின்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயணிக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
(சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் குழப்ப சூழ்நிலை தொடர்பாக பல்வேறு அரசியற் கட்சிகளும் அரசியல் ஆய்வாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சூழலானது தமிழ் பேசுகின்ற சிறுபான்மை அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான கட்டமாகும்.
இங்கு புரையோடிப்போயிருக்கின்ற தமிழர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்காக இந்த ஆட்சி மாற்றத்தினை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற நிலைமையினை சீர்படுத்தக்கூடிய இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது சாலச்சிறந்தது என மக்கள் குறிப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினுடைய ஆட்சியில்தான் தமிழர்கள் அதிகளவான பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் மாத்திரமல்ல இந்த நாடே அதளபாதாளத்திற்கு செல்லும் நிலைமை ஏற்பட்டது.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தலைமைகளும் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் ஆதரவு வழங்குவோம் என்கின்ற நிலையை மாற்றவேண்டும்.
கடந்த காலத்திலிருந்து வந்த வரலாறை மாற்றி நாட்டின் தமிழர்களுக்கான சாதகமான சூழலை ஏற்படுத்தக்கூடிய அரசின் பின்னால் செல்ல வேண்டும். இதைவிடுத்து விடாப்பிடியாக இருப்போமானால் அது தமிழர்களுக்கு பாதகமாகவே அமையும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.