வியாழேந்திரனின் துரோகத்திற்கான திட்டம் கனடாவில் தீட்டப்பட்டது?

வியாழேந்திரனின் துரோகத்திற்கான திட்டம் கனடாவில் தீட்டப்பட்டது?

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திவந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த தரப்பிற்கு மாறி பிரதி அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொண்டதன் பின்னணியில் பேரம்பேசியவர்கள் தொடர்பான உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் – ஊகங்கள் தொடர்ந்தும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், திடீரென மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதன் பின்னணியில் நடந்த நாடகம் குறித்த சில தகவல்கள் ஆங்கில இதழ் வாரஇதழ் ஒன்றில் வெளியாகியுள்ளன.

அதாவது, கனடாவில் உள்ள தமிழ்ச் சமூகத்தினால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.துரைரட்ணசிங்கமும் எஸ்.வியாழேந்திரனும் அழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வு முடிந்த பின்னர், இருவரும் ஒன்றாக விமானம் ஏறினர். பயணத்தில் அவர்களின் ஆசனங்களும் அருகருகே தான் இருந்தன. கனடாவில் இருந்து கொழும்புக்கு 24 மணித்தியாலம் விமானத்தில் ஒன்றாகப் பயணித்த தனது சகாவிடம்கூட அந்த திட்டத்தை வெளிப்படுத்தாமல் இரகசியமாக வைத்திருந்தார்.

அவர்கள் தரையிறங்கியதும், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு துரைரட்ணசிங்கத்துக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், வியாழேந்திரனுக்கு அந்த தகவலை வழங்குவதற்கு கூட்டமைப்பு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஏனென்றால், அவர் விமான நிலையத்தில் இருந்து, கட்டுநாயக்கவுக்கு அருகே உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறிது ஓய்வெடுத்த பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வியாழேந்திரன் கனடாவில் இருந்தபோதே, இந்த பேரத்தை ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேற்கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது, என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரபல ஆங்கிலப் பத்தி எழுத்தாளர் டி.பி.எஸ்.ஜெயராஜினால் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், வியாழேந்திரனுடன் பலர் தொடர்பு கொண்டிருந்ததாகவும் அவர்களில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அதேபோன்று கிழக்கு மாகாண ஆளுநர் றோஹிக போகொல்லாகம ஆகியோர் இந்த திட்டத்தில் பிரதான பங்கு வகித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை, பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு மாகாண) பிரதி அமைச்சராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net