அசிட் வீச்சில் காயமடைந்த ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர் மரணம்!

அசிட் வீச்சில் காயமடைந்த ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர் மரணம்!

அசிட் தாக்குதலில் காயமடைந்த உக்ரேனின் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர் Kateryna Handzyuk (வயது-33) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடும் காயங்களுக்கு உள்ளாகி கடந்த மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார்.

உக்ரேனின் கெர்சொன் நகரசபை உறுப்பினராகவும் பதவி வகித்திருந்த Kateryna ஊழலுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வந்ததோடு, அவை தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி வந்தார். இதனால் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி கெர்சொன் நகரின் வட பிராந்தியத்தில் வைத்து அவர் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவரது கண் உள்ளிட்ட உடம்பின் 40 வீதமான பகுதி எரிகாயங்களுக்கு உள்ளானது.

வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த போது அவர் தெரிவித்த ஒரு கருத்து, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதாவது ”உக்ரேனின் நீதியை விட நான் நலமாக உள்ளேன். காரணம் குறைந்தபட்சம் எனக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது. ஆனால், நீதியை நிலைநாட்டுவதற்கான சிகிச்சையை யாரும் அளிப்பதில்லை” என்றார்.

அவருடைய இறப்பு சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, Katerynaவின் மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோ குறிப்பிட்டுள்ளார்.

அசிட் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே 5 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net