அரசாங்க ஆதரவு பேரணி: கொழும்பில் தீவிர பாதுகாப்பு!

அரசாங்க ஆதரவு பேரணி: கொழும்பில் தீவிர பாதுகாப்பு!

அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து வெவ்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பத்தரமுல்லை நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதிக்குச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருமளவானவர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் சுமார் 1500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முக்கிய பிரதேசங்களில் விசேட அதிரடிப் படையினரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக பொல்துவ சந்தியூடான வாகன போக்குவரத்து நிறுத்தப்படவுள்ளது. அத்தோடு, பத்தரமுல்லைக்;குச் செல்லும் ஏனைய வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதோடு, குறித்த பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் இரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக, அரசாங்கம் பிளவுற்று புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட குறித்த நியமனத்தை எதிர்த்து ஐ.தே.க.வால் தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தைக் கூட்டாமல், பெரும்பான்மையை நிரூபிக்காமல் பிரதமரை பதவி விலக்க முடியாதென ஐ.தே.க. குறிப்பிடுகின்றது.

அதுமட்டுமன்றி எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றையும் கொண்டுவர ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இன்றைய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net