கிளிநொச்சி வைத்தியசாலைகளில் நிரந்தர வேலைவாய்ப்பினை இல்லாதொழிக்கும் யோசனைக்கு கடும் விசனம்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணி உதவியாளர் நியமனங்களை மேற்கொள்வதன் மூலம் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு காலத்திற்குக் காலம் நிரந்தர அரச வேலைவாய்ப்பினை வழங்கும் நீண்டகால நடைமுறை தற்போது இல்லாது போகும் ஆபத்து நேர்ந்துள்ளது. சுகாதார துறை தவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு வைத்தியசாலையிலும் வெளிவாரி சுத்திகரிப்புச் சேவைக்கான ஒப்பந்தகாரர்கள் மூலம் வைத்தியசாலையினைப் பராமரிக்கும் நடைமுறை இதுவரை இருந்ததில்லை.
இதற்குக் காரணம் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தமது வைத்தியசாலை என்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதும், சுகாதாரத் திணைக்களமானது காலத்திற்குக் காலம் சுகாதாரப் பணி உதவியாளர் தரத்தில் உருவாகும் ஆளணி வெற்றிடங்களுக்கு புதியவர்களை உள்வாங்கி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதுமே ஆகும்.
இதன்பிரகாரமே 2009ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது மாவட்டத்திற்கு கனிஸ்ட்ட தர சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான அனுமதிக்கப்பட்ட ஆளணி 50 ஆக இருந்தபோதும் 2010ம் ஆண்டு ‘மாவட்டத்தில் வெளிவாரி சுத்திகரிப்புச் சேவைக்கான ஒப்பந்தகாரர்கள் மூலம் வைத்தியசாலைகளைப் பராமரிக்கும் நடைமுறை இல்லை’ என்ற நியாயப்படுத்துதலின் ஊடாக நீண்ட காலம் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்களை அரச சேவைக்கு உள்வாங்கிக் கொள்வதற்கான விசேட அனுமதி பெறப்பட்டு நிரந்தர வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாக அறியமுடிகிறது.
இவ்வாறு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கான மேலதிக ஆளணியானது 2013ம் வருடம் அங்கீகரிக்கப்பட்டு மாவட்டத்தில் கனிஸ்ட்ட தர சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான அனுமதிக்கப்பட்ட ஆளணி 169 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இரண்டாவது கட்டமாக 2014ம் வருடத்தில் நீண்டகாலம் பணியாற்றிய மேலும் ஒரு தொகுதி சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் அதே நியாயப்படுத்தலின் ஊடாக பெறப்பட்ட விசேட அனுமதிமூலம் வழங்கப்பட்டு தற்போது 301 கனிஸ்ட்ட தர சுகாதாரப் பணி உதவியாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வருகிறார்கள்.
அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திற்கான மேலும் 204 கனிஸ்ட்ட தர சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான ஆளணி வெற்றிடத்திற்கான கோரிக்கை சுகாதார அமைச்சினால் உரிய வகையில் தேசிய சம்பள மற்றும் ஆளணிகள் ஆணைக்குழுவிற்கு 2017ம் வருடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்போது இந்த மேலதிக ஆளணிக் கோரிக்கைக்கான நியாயப்பாடாக ‘கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு வைத்தியசாலைகளிலும் வெளிவாரி சுத்திகரிப்புச் சேவைக்கான ஒப்பந்தகாரர்கள் மூலம் வைத்தியசாலைகளைப் பராமரிக்கும் நடைமுறை இல்லை’ என்பதே முன்வைக்கப்பட்டு அது தேசிய வேதனங்கள் மற்றும் ஆளணிகள் ஆணைக்குழுவினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளை அடுத்த வருடத்திலிருந்து வெளிவாரி சுத்திகரிப்புச் சேவைக்கான ஒப்பந்தகாரர்கள் மூலம் பராமரிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கை வடமாகாண ஆளுனருக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இக்கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டால் கனிஸ்ட்ட தர சுகாதாரப் பணி உதவியாளர் மேலதிக ஆளணி வெற்றிடங்களுக்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது ஆகலாம் எனவும் தெரியவருகிறது.
ஏனெனில் கனிஸ்ட்ட தர சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான பிரதான பணியானது வைத்தியசாலைப் பராமரிப்பாகும்;;. இந்நிலையில் அப்பணியினை வெளிவாரி சுத்திகரிப்புச் சேவைக்கான ஒப்பந்தகாரர்கள் செய்வதாயின் ‘எதற்காக கனிஸ்ட்ட தர சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான ஆளணி அதிகரிக்கப்படவேண்டும்?’ என்ற அடிப்படையில் 2017ம் வருடம் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக ஆளணி அதிகரிப்பிற்கான கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என அறியமுடிகிறது. அவ்வாறு இடம்பெறின் பலரின் வேலைவாய்ப்பு இல்லாது போகும் மிக மோசமான நிலைமையே உருவாகும்.