அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி – மஹிந்த இடையில் புரிந்துணர்வு!
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காட்டிய அக்கறையீனம் காரணமாகவே அவரை பதவியில் இருந்து நீக்கியதாகவும் அரசியல் கைதிகளை தொடர்பில் சாதகமான புரிந்துணர்வொன்று புதிய பிரதமருடன் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘கடந்த 2015ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றி பெறுவதற்கு தமிழ் மக்கள் ஆற்றிய பங்களிப்பினை மறந்து விடவில்லை.
அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பது நான் பொறுப்புணர்வுடனேயே செயற்படுகின்றேன்.
கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகளில் 90 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று வடக்குக் கிழக்குச் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு அவர்களுடைய பிர்ச்சினைகள் தீர்க்கப்படும் வகையில் அது செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அரவியல் தீர்வு பிரிக்கப்படாத நாட்டுக்குள் அவசியமென்பதை நான் உணர்ந்து கொண்டுள்ளேன். அவ்வாறான தீர்வு எட்டப்படும் வரை நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்தை எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறான விடயங்களில் கடந்த மூன்றரை வருடங்களாக என்னுடன் இணைந்து செயற்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சி காட்டிய அசமந்தப் போக்குக் காரணமாகவே அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது புதிய அரசாங்கம் என்ற வகையில் விரைந்து வினைத்திறனுடன் செயற்படத் தீர்மானித்துள்ளோம்.
அடுத்த தீபாவளிக்கிடையில் தமிழ் மக்களுட்பட அனைவருடைய எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற முடியுமென்ற நம்பிக்கையொன்று ஏற்பட்டுள்ளது’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.