622ஆவது நாளாக தீபாவளி தினத்தில் கண்ணீருடன் உறவினர்கள்!

622ஆவது நாளாக தீபாவளி தினத்தில் கண்ணீருடன் உறவினர்கள்!

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், 622ஆவது நாளாகவும் வவுனியாவில் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

தீபாவளி நாளான இன்றும் (செவ்வாய்க்கிழமை) இம்மக்கள் தமது உறவினர்களுக்கான கண்ணீருடன் மழைக்கு மத்தியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த தீபாவளிக்கு முன் தமது பிள்ளைகளுக்கான தீர்வு கிடைக்குமென தமிழ் அரசியல் தலைமைகள் தெரிவித்த போதிலும் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லையென உறவினர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களாகின்ற போதும் தமது துயர் துடைப்பார் யாருமில்லையென இம்மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் எவ்வித பதிலும் வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு என்ன நேர்ந்ததென அரசாங்கம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தி இம்மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், தமது உறவுகள் குறித்து கவனஞ்செலுத்தப்படுவதில்லையென தெரிவிக்கும் இம்மக்கள், தமது நிலையுணர்ந்து மனிதாபிமான ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © 4790 Mukadu · All rights reserved · designed by Speed IT net