நான் மீண்டும் பிரதமரானால்….!

நான் மீண்டும் பிரதமரானால்….!

வடக்கு – கிழக்கு இணைப்பை பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர பிற கட்சிகள் எதுவும் அந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்பில் பிபிசி செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

வடக்கையும் கிழக்கையும் இணைக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென ஜனாதிபதி கூறியிருக்கிறார். கூட்டமைப்பின் ஆதரவுடன்தான் மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வர முடியுமென்றால் என்ன செய்வீர்கள்? என அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதைப் பற்றிக் கேட்க வேண்டுமென்றால், அதற்கு சரியான நபர் எதிர்க்கட்சித் தலைவர்தான். அவர்தான் ஜனாதிபதியோடு இது தொடர்பாக நீண்ட விவாதங்களை நடத்தியிருக்கிறார்.

மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டுமென அவரது கட்சி கோரியிருக்கிறது. வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு விதமான ஆலோசனைகளை முன்வைக்கிறார்கள்.

இம்மாதிரியான ஒரு வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக நிபுணர்களின் ஆலோசனையை பெற வேண்டும். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை விடுங்கள்.

கூடுதலாக என்ன அதிகாரங்களை மாகாணங்களுக்கு அளிக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். சில அதிகாரங்களை அளிக்க முடியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

பல கட்சிகள் இருக்கின்றன. யாரும் ஒரு உடன்பாட்டுக்கு வர மறுக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சி உள்பட பல கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை அரசியல் சாசன அவையின் வழிநடத்தும் குழுவிடம் அளித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Copyright © 6624 Mukadu · All rights reserved · designed by Speed IT net