விசேட மேல் நீதிமன்றில் கோட்டா இன்றும் முன்னிலை!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் இன்றும் முன்னிலையாகியுள்ளார்.
டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியைப் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரகெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கோட்டா உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், நிதிக்குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கு விசேட மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டது.
இதேவேளை, கோட்டா உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான குறித்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென கடந்த விசாரணையின் போது விசேட மேல் நீதிமன்றில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.