நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு!
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் முன் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் தோற்கடிக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு தேவைப்பட்டது.
எனினும் அதற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தோல்வி கண்டுள்ளார்.
இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையிலேயே அவசரமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளர்.
கடந்த சில வாரங்களாக இலங்கையில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மிகவும் முக்கியமானதாக காணப்பட்டது.
எனினும் பலசுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது.
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கே ஆதரவு வழங்கவுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதிக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது.
அதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க மறுத்து விட்டன.
அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து மேலதிக உறுப்பினர்களைப் பிடுங்கியெடுக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் நிலை உருவானது.
இதன் காரணமாக ஜனாதிபதி வேறுவழியின்றி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நேற்று மாலை ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்று ஒப்புக் கொண்டிருந்தார். 104 அல்லது 105 உறுப்பினர்களின் ஆதரவே தமது அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.