புதிய வைத்திய அத்தியட்சகர் கடமையை பொறுப்பேற்கவிடாது திருப்பி அனுப்பபட்டுள்ளார்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிய வைத்திய அத்தியட்சகர் கடமையை பொறுப்பேற்கவிடாது திருப்பி அனுப்பபட்டுள்ளார்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட வைத்திய அத்தியட்சகர் கடமையைப் பொறுப்பேற்கச் சென்றபோது அங்கு பதில் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றிய வைத்தியர் இருக்கவில்லை எனவும் புதிய வைத்திய அத்தியட்சகர் தமது பதவியை ஏற்ற பின்னர் அங்கு வருகை தந்த பதில் வைத்திய அத்தியட்சகர் பணியாளர்களை நோக்கி ‘ஏன் புதியவரைப் பதவி ஏற்க அனுமதித்தீர்கள்?’ எனக் கண்டித்ததுடன் வைத்திய அத்தியட்சகரது அறையினைப் பூட்டித் திறப்பினைத் தம்முடன் எடுத்துச் சென்று விட்டார் எனக் குற்றம் சுமத்தப்படுகிறது.

இதனை அடுத்துப் புதிய வைத்திய அத்தியட்சகர் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குச் சென்று இச்சம்பவம் தொடர்பில் முறையிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

மத்திய சுகாதார அமைச்சினால் ஏற்கெனவே 2017ம் ஆண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குத் தகுதிவாய்ந்த வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டவர்

அரசியல் செல்வாக்கின் மூலம் பிறிதொரு மாவட்டத்திற்குப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமை நியமனம் பெற்றுச் சென்றுள்ளார்.

அதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள் மத்திய சுகாதார அமைச்சரது நேரடித் தலையீட்டால் வைத்தியர் ஒருவர் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த இரண்டு அரசியல் நியமனங்களுக்கும் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் வாரியம்; ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சினைத் தொடர்புகொண்டு வினவியபோது இது குறித்த முறைப்பாடு தமக்குக் கிடைத்திருப்பதாகவும், தகுதிவாய்ந்த மருத்துவர்களை வடக்கிற்கு மத்திய சுகாதார அமைச்சு நியமிக்கும்போது அவர்களைப் பணிசெய்ய விடாது திருப்பி அனுப்பும் அதேவேளை சிக்கல்கள் நேரிடும்போது அதற்கு மத்திய அரசினையும் மத்திய சுகாதார அமைச்சினையும் குற்றம் சாட்டுவதை ஒரு வழக்கமாக வடமாகாணம் செய்து வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டது.

Copyright © 8812 Mukadu · All rights reserved · designed by Speed IT net