மண்டேலாவாக எதிர்பார்க்கப்பட்ட மைத்திரி முகாபே ஆனார்!

மண்டேலாவாக எதிர்பார்க்கப்பட்ட மைத்திரி முகாபே ஆனார்!

நெல்சன் மண்டேலாவாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரி, ரொபர்ட் முகாபேயாக மாறிவிட்டாரென ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜனாதிபதியின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, தனது அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்ட தலைவராக வரலாற்றில் இடம்பிடித்த மைத்திரி, தாம் கொண்டுவந்த அரசமைப்புக்கு எதிராக செயற்பட்ட அரச தலைவராகவும் மாறிவிட்டார்.

ஜனாதிபதியின் விருப்பத்துக்கு இணங்கவே இந்த அரசமைப்பை நாம் அன்று கொண்டுவந்தோம்.

4 வருடங்களும் 6 மாதங்களும் கடந்த பின்னரே நாடாளுமன்றை கலைக்க முடியும் என அரசமைப்பிலும் உள்ளது. அதற்கு இணங்க 2020 பெப்ரவரிக்கு பிறகே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

ஆனால், இன்று தமது தரப்பினருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அரசமைப்புக்கு முரணாக ஒரு சர்வாதிகாரி போன்று நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

நாம் தேர்தலை சந்திக்க என்றும் அஞ்சியதில்லை. அரசமைப்புக்கு மீறி செயற்பட்ட காரணத்தினால்தான் உச்சநீதிமன்றத்தையும் நாடவுள்ளோம்.

ஆபிரிக்க நாடுகளில்கூட இல்லாத அளவிற்கு இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை காணப்படுகிறது.

நெல்சன் மண்டேலா போன்ற தலைவரைக் கொண்டுவருவோம் என்றே நாம் 2015ஆம் ஆண்டு வாக்களித்திருந்தோம். எனினும் தற்போது முகாபே போன்ற ஒரு பைத்தியக்கார தலைவரே நாட்டுக்குக் கிடைத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற தேவை இருந்தால், எம்முடன் கலந்து ஆலோசித்திருக்கலாம். நாமும் ஒத்துழைப்புக்களை வழங்கியிருப்போம். அதனை விடுத்து இவ்வாறு செயற்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net