ஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது!
ஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் அமர்த்தவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமகாலத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் யாழில், நேற்று (புதன்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியில் நெருக்கடிகள் தொடர்பில் கூட்டமைப்பு நீதிமன்றம் சென்ற விடயத்தை பல்வேறு விதமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய எதிராளிக் கட்சிகள் விமர்சித்து வருகின்றார்கள்.
அவர்கள் ஜனநாயக விரோத சர்ச்சையை கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக தற்போது செய்து வருகின்றார்கள். அதிலும் ரணில் விக்ரமசிங்கவைக் காப்பாற்றுவதற்காகவே கூட்டமைப்பு இதனைச் செய்கின்றதாக பிரசாரம் செய்கின்றார்கள்.
உண்மையில் எங்களைப் பொறுத்தவரையில் ஐனாதிபதியின் செயற்பாடு அப்பட்டமான அரசியலமைப்புச் சட்ட மீறல் ஆகும். இச்செயலுக்காகவே நாங்கள் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கின்றோம்.
இது தனிநபர் பதவி பெற வேண்டும் அல்லது அதிகாரத்திற்கு வரவேண்டுமென்பதற்காக நாங்கள் இதனைச் செய்யவில்லை என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கின்றோம்.
உண்மையில் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் அமர வேண்டுமென்று நினைக்கின்ற தரப்பினர்கள், இவ்விடயத்தில் கூட்டமைப்பினராகிய நாங்கள் நடுநிலை வகிக்க வேண்டுமென்று கூறுகின்றார்கள். அவ்வாறு நடுநிலை வகிப்பதும், பலவீனமான ஒரு தரப்பிற்கு ஆதரவளிப்பதும் ஒன்று தான்.
ஆகவே மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியில் அமர வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு கூட்டமைப்புக்கு எதிராக எதிராளிக் கட்சிகள் பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள் ” என்று குறிப்பிட்டார்.