நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வது தொடர்பில் தீர்மானமில்லை!

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வது தொடர்பில் தீர்மானமில்லை!

நாடாளுமன்ற அமர்வில் நாளை கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என மஹிந்த ஆதரவு அமைச்சரான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே, மஹிந்த ஆதரவு அமைச்சரான பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலங்கை வரலாற்றிலேயே எந்தவொரு சபாநாயகரும் இவ்வாறான ஒரு வகையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றியதில்லை.

அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் அனைத்தும் மீறப்பட்டே, கடந்த நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உலகில், எந்தவொரு நாடாளுமன்றிலாவது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளதா? – இல்லை. இதனால்தான் ஜனாதிபதி இந்த பிரேரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளார்.

உரிய முறைக்கு இணங்க இவை நிறைவேற்றப்படவில்லை என்பதையே அவரது இந்த முடிவு காண்பித்துள்ளது.

இவ்வாறான முறையில் நாடாளுமன்றை கொண்டு செல்வதானது அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும்.

குறைந்தது நீதிமன்றமாவது இதனை ஏற்றுக்கொள்ளுமா? இவ்வாறே எல்லாப் பிரேரணைகளும் நிறைவேற்றப்படுமாக இருந்தால் நாட்டில் என்ன நடக்கும்?

நாம் ஜனநாயகத்துக்காக ஜனநாயக ரீதியாக குரல் கொடுப்பவர்கள். எனவே, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, நாளை நாடாளுமன்ற அமர்விற்கு செல்வதா இல்லையா என்பதை நாளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலை இடம்பெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதுதான் தீர்மானிப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net