ரணிலை பிரதமராகியே தீருவோம்! மைத்திரி – மகிந்தவுக்கு சவால்!
அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்று புதிய பிரதமராக ரணில் விக்கிரம சிங்கவை ஜனாதிபதி நியமிக்கும் வரை எமது போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாளை நாம் நாடாளுமன்றம் செல்வோம். நாளையும் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கு நாம் பயப்படப்போவதில்லை. எந்தச் சவாலையும் ஏற்க நாம் தயாராகவே இருக்கின்றோம்.
நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவேண்டும். அது நாடாளுமன்ற சம்பிரதாயம், நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளார்.
மகிந்த தரப்பினர் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்காகவே சபை அமர்வை குழப்பினர். எந்தச் சவால் வந்தபோதும் ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற மேலாண்மையையும் பாதுகாக்க நாம் உறுதி பூண்டிருக்கின்றோம்.
கடந்த இரண்டு நாடாளுமன்ற அமர்வுகளின் போதும் சபை நடவடிக்கைகளை திட்டமிட்டே குழப்பினர்.
இதன் பின்னணியில் ஜனாதிபதியும் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்ற சந்தேகமும் எமக்குள்ளது.
எமக்கு சரியான தீர்வு கிட்டும் வரை நாம் ஓயப்போவதில்லை. சட்ட ரீதியான பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்து ஆட்சிப் பொறுப்பை உடனடியாக ஐக்கிய தேசிய முன்னணியிடம் வழங்க வேண்டும்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி காலம் கடத்துவது எதிர்வரும் நாட்களில் அவருக்குத்தான் பாதகமாக அமையலாம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.