போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே எந்த முன்னேற்றமும் இல்லை!
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மாறிய அரசாங்கங்களால் போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட எமது மக்களிடையே எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த காலப்பகுதியில் மாறிய அரசாங்கங்கள்கூட எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அக்கறை செலுத்தியிருக்கவில்லை.
தமிழ்த் தேசியப் போராட்டத்தை ஆதரித்த மக்களாக இருக்கும் நாம் இருக்கின்றோம். ஆனாலும் இந்த ஆதரவானது ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவாக இருந்ததால் எமது மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
கடுமையாக போரினால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு கட்டாயமாக அரசாங்கம் அடிப்படை வசதிகளையாவது ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. இந்நிலையில் எமது எதிர்கால நடவடிக்கைகள் எமது இருப்புக் குறித்துச் சிந்தித்துச் செயற்படுபவையாக இருக்கவேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.