திருகோணமலை சுற்றிவளைப்பில் பெண்கள் கைது!
திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த போது அதில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக உதவி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற குழுவினர் அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, மசாஜ் நிலையம் நடத்துவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி, அதாவது வைத்தியர் ஒருவர் இல்லாமல் ஆயுர்வேத மசாஜ் நிலையத்தை நடத்திச் சென்ற இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கம்பளை மற்றும் தம்புள்ளை பகுதிகளைச் சேர்ந்த 33 வயது, 28 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களையும் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய போது ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறும் எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பதில் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.