சனல் 4 பேட்டியில் ரணில் – மங்கள தெரிவித்திருப்பது என்ன?
எனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ளது, பெரும்பான்மையுள்ளவரை என்னை வெளியேற்ற முடியாது நான் பெரும்பான்மையை இழந்தால் மாத்திரமே என்னை வெளியேற்ற முடியும் என ரணில் விக்கிரமசிங்க சனல் 4ற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் உங்களிற்கு எதிராக உள்ள நிலையில் – பலவந்தமாக ஆட்சியதிகாரத்திலிருக்க முயல்வதன் மூலம் நீங்கள் அரசமைப்பை மீறுகின்றீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவினால் பெரும்பான்மையை நிருபிக்க முடிந்தால் அவரால் மீண்டும் அலரிமாளிகையை பெறமுடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதால் எவ்வாறான தாக்கங்கள் ஏற்படலாம் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மங்களசமரவீர ஒரு சொல்லில் அச்சம் என குறிப்பிடலாம் என தெரிவித்துள்ளார்
மகிந்த ராஜபக்சவும் அவரது நிர்வாகத்தவர்களும் இந்த நாட்டை ஆட்சி செய்த பத்து வருடங்களில் அச்சத்தின் குறியீடுகளாக விளங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் கடந்த மூன்று வாரங்களில் மீண்டும் அச்ச உணர்வை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக செயற்பட்டுள்ள விதமும் அதற்கு அவர் மறைமுகமாக ஆதரவளித்துள்ளமையும் மகிந்த ராஜபக்ச மீண்டும் நிரந்தரமாக பிரதமரானால் எவ்வாறான நிலை காணப்படும் என்பதை மக்களிற்கு உணர்த்தியுள்ளது எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.