பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் 30 பேர் உயிரிழந்தனர். நேற்று (வௌ்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிரிக்கலாம் என்றும் அச்சப்படுகிறது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நேற்று தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கைபர் பக்துன்கவா மாகாணத்தின், ஓரக்சாய் மாவட்டத்தில் உள்ள கலயா என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்களின் ‘இமாம்பர்கா’ என்ற வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது.
அதன் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) வாராந்த சந்தை கூடிய நிலையில், அதனை இலக்கு வைத்தே இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், 30 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், சம்பவத்தில் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில், பெரும்பாலானோர் சிறுபான்மையின ஷியா முஸ்லிம்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பாக கருத்து வௌியிட்ட மாகாண முதல்வர் மெகமூத் கான், நாட்டில் அமைதி நிலவுவதை எங்கள் எதிரிகள் விரும்பவில்லை என குற்றம்சுமத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அரசின் நேரடி நிர்வாகத்தில் இருந்து வந்த ஓரக்சாய் மாவட்டம், அண்மையில் கைபர் பக்துன்கவா மாகாணத்துடன் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.