ஜெயலலிதா குளிர்பானம் அருந்தும் காட்சி உண்மையானதா? – மீண்டும் குழப்பம்
அப்பல்லோ வைத்தியசாலை ஊழியரின் வாக்குமூலத்தால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குளிர்பானம் அருந்தும் வீடியோ காட்சி உண்மையானதா? என்ற புதிய குழப்பம் மீண்டும் உருவாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
அப்பல்லோ வைத்தியசாலையின் தொற்று நோய் தடுப்பு சிறப்பு வைத்தியர் ராமகோபாலகிருஷ்ணன், நரம்பியல் பிரிவு தொழில்நுட்பவியலாளர் யுவஸ்ரீ, தீவிர சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலாளர் பஞ்சாபிகேசன் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆணையத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவு அறையின் ஜன்னல் கண்ணாடி திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கும்’ என தொழில்நுட்பவியலாளர் பஞ்சாபிகேசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் அவரிடம் குறுக்கு விசாரணை செய்த போது, ‘திரைச்சீலை சில சமயங்களில் திறந்து விடப்படும். அப்போது அறைக்கு வெளியே மரங்கள் இருப்பது தெரியும்’ என்றும் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது குளிர்பாணம் அருந்தும் வீடியோ காட்சி அவரது மரணத்துக்கு பின்னர் வெளியானது.
அதில், அவர் தங்கி இருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியில் திரைச்சீலை காணப்படாது. அந்த கண்ணாடி வழியாக மரம் மற்றும் செடிகள் தெரியும்.
இதன் காரணமாக ஜெயலலிதா குளிர்பானம் அருந்தும் வீடியோ காட்சி அவர் தங்கி இருந்த அறையில் எடுக்கப்பட்டது தானா? என்ற குழப்பம் ஏற்கனவே இருந்து வரும் நிலையில் தொழில்நுட்பவியலாளரின் வாக்குமூலம் மீண்டும் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கு 22.9.2016, 23.9.2016 ஆகிய திகதிகளில் அப்பல்லோ வைத்தியசாலையின் வைத்தியர் ராமசுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
24.9.2016 முதல் 1.10.2016 வரை அவர் வெளிநாட்டில் இருந்த போது அவருக்கு பதிலாக வைத்தியர் ராமகோபாலகிருஷ்ணன் நோய் தொற்றுக்காக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தில், ‘15.11.2016 ஆம் தியதியன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று முழுமையாக சரியாகி விட்டது’ என கூறியுள்ளார்.
நோய் தொற்றினால் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததாகவும்.
இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை நோய் தொற்று இருந்ததாக உறுதி செய்யப்பட்டு அப்பல்லோ வைத்தியசாலை அளித்த இறப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நோய் தொற்று தொடர்பாக வைத்தியர் ராமகோபாலகிருஷ்ணன் அளித்த வாக்குமூலம் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக விரிவாக விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.