தமிழீழ மாவீரர் தின அறிக்கை – 27-12-2018.
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்
கார்த்திகை 27, 2018.
எங்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று 27ஆம் நாள் கார்த்திகை திங்கள் 2018 ஆம் ஆண்டு. எங்கள் தாயக ஈழ மண்ணின் காவல் தெய்வங்களான மாவீர செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரும் ஒரு புனிதமான நாள்.
தாயக விடுதலையே குறிக்கோள் என்ற ஒற்றை சொல்லை முழு மூச்சாக கொண்டு, தங்கள் இன்னுயிர்களை ஈழ விடுதலைப்போருக்கு காலம் நேரம் இன்றி அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள்.
தமிழீழச் சுதந்திரப்போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் ஒரு தூயநாள்.
எமது மண்ணிலே, எமது களத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, மக்களுக்காகவே விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எதிரிக்குத்தலைவணங்காத வீர மறவர்கள்.
எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த, மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்து நின்றவர்கள்.
இவர்கள் அனைவரும் என்றென்றும் எங்கள் உள்ளங்களில், வைத்து பூசிக்கப்படவேண்டியவர்கள்.
தமிழ் ஈழ விடுதலைப்போராட்ட தீயை ஓங்கி வளர்த்து தங்கள் உடல், உயிர், ஆன்மா, குருதியை தாரை வார்த்து கொடுத்தவர்கள். அகிலம் எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உற்ற உறவுகளாய், பெற்றோர்களாக, சகோதரர்களாக, உடன் பிறப்புக்களாய் எங்களுடன் வாழ்ந்து எங்களை விட்டு பிரிந்தவர்கள்.
பல தசாப்தங்களாக அடிமைப்பட்டு இருந்த தமிழ் மக்களின் முதுகெலும்பை நிமிர வைத்து, அவர்களை வாழ வழி சமைத்த வீரர்கள். எங்களை வாழ வைக்க தங்களை ஆகுதியாக்கிய வீர மறவர்களை நினைவு கூரும் ஒரு நாள்.
ஈழ விடுதலை கோரி தமிழ் மக்கள் நடத்திய ஆயுதப்போராட்டம் 2009 ஆண்டு முடக்கப்பட்ட நிலையில், கடந்த 9 வருடங்களாக இடம்பெற்றுவரும் மக்களின் தேவைகள் அடங்கிய கோரிக்கைகள் இலங்கை அரசின் காதுகளுக்கும் சர்வதேச உலகத்தின் காதுகளுக்கும் எட்டாமல் போய் உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தமிழ் மக்களுக்கு போதிய அளவு சாதகமாக இல்லாவிடினும், தமிழீழத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் அனைத்தும் சர்வதேச சமூகத்திற்கு அவ்வப்போது செய்திகளை விடுத்தவண்ணமே உள்ளன.
இந்த செய்திகளின் பின்னணியில் தமிழீழ மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் வகையில் சர்வதேச சக்திகளுடன் நாம் இணைந்து பயணிக்கவேண்டும்.
சிங்கள அரசின் சதிகளில் ஒன்றாக இலங்கை குடி மக்களின் ஐனநாயக விருப்பத்திற்கு எதிரான சம்பவமாக மகிந்த ராஐபக்ச மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். 2018 ஆண்டின் முழு ஐனநாயக விரோத செயற்பாடக மகிந்த ராஐபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட அரசியல் கேலிக்கூத்து இலங்கைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முடக்குவதற்கு சர்வதேச அளவில் பாரிய முனைப்புக்களை எடுத்த இலங்கை அரசின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஐபக்சவின் குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் ஆட்சி அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் மாற்றப்பட்டது.
எனினும் மகிந்த ராஐபக்ச பாராளுமன்ற உறுப்பினர்களை திரை மறைவில் விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவண்ணம் இருந்துள்ளார். இதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சிகளின் கூட்டு அரசியல் அமைப்பான நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசு திடீர் என்று முறிக்கப்பட்டு எதுவித ஐனநாயக வரையறைகளுக்கும் உட்படாமல் மகிந்த ராஐபக்ச அதிரடியாக பிரதமர் ஆக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மகிந்த ராஐபக்ச மீண்டும் பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டமைக்கு, மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு கூறிய விளக்கம் சிறுபிள்ளைத்தனமாக அமைந்துள்ளது.
ஐனநாயக முறைகளுக்கு எதிராக தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு சாதகமாக எவ்வாறு வேண்டுமானாலும் காரணம் கூறிவிடலாம். அந்த வகையிலேயே மைத்திரிபால சிறிசேன தான் கொலை செய்யப்பட இருந்தாகவும், அதன் பின்னணியில் கூட்டு அரசின் பிரதிநிதியான ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்கதான் இருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன கூறிய காரணம் சர்வதேச நாடுகளினாலும் ஐனநாயகத்தை ஏற்றுக்கொள்ளும் அமைப்புக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மகிந்த ராஐபக்ச மீண்டும் பிரமதராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த நாடுகளின் வரிசையில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
பிராந்திய ரீதியில் இலங்கையை எந்த நாடு கைக்குள் வைத்திருப்பது எனும் போட்டியின் அடிப்படையிலேயே 2009 ஆண்டு வரை இடம்பெற்ற ஆயுதப்போராட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு மேற்குலக நாடுகளும் ஆசிய நாடுகளும் தங்கள் சக்திக்கும் அதிகமாக இலங்கைக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கின. ஆயுத வழங்கலின் உறவின் தாக்கம், போருக்கு பின்னரான இலங்கையை துண்டாடல் வரை அழைத்துச்சென்றுள்ளது.
ஐப்பான், சீனா, அமெரிக்கா, மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியமைக்கும் தற்போது இலங்கையை துண்டாடுவதிலும் முக்கிய பங்கு வகித்துவருகின்றன. இவ்வாறு இலங்கையை துண்டாடுவது ஏனைய நாடுகளுடன் உறவைப்பேணுவது மற்றும் பிராந்திய ரீதியில் இலங்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து நட்புநாடுகளுடன் நட்பு பாராட்டுவது போன்ற விடயத்தில் எந்த அரசியல்வாதி ஒத்துழைக்கின்றார் என்பதன் அடிப்படையிலேயே எந்த கட்சி நாட்டை ஆளுவது என்று போட்டி ஏற்பட்டுள்ளது.
யார் நாட்டை ஆண்டால் தங்களுக்கு சாதகம் என்று எண்ணும் நாடுகள், பணத்தை அள்ளிக்கொடுத்து தங்களின் செயலுக்கு ஏற்றதாக ஐனநாயக முறைகளுக்கு எதிராக மகிந்த ராஐபக்சவை தெரிவு செய்து மீண்டும் ஒரு முறை ஐனநாயத்தை குழிதோண்டி புதைத்துள்ளனர்.
மகிந்த ராஐபக்சவை பிரதமராக நியமித்த மைத்திரிபால சிறிசேன, ஐனநாயகத்தை ஏமாற்ற நடத்திய நாடகம், சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. நான்தான் பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்கவும், நான்தான் பிரதமர் என்று மகிந்த ராஐபக்சவும், ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு, பாராளுமன்றத்தில் நடத்தி முடித்த பாராளுமன்ற நாடகம் இலங்கை மக்களை மட்டும் அல்லாமல், அனைத்து ஐனநாயக விரும்பிகளையும் ஏமாற்றியுள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கையின் ஐனநாயகம் பலமுறை துடிக்கத்துடிக்க அறுக்கப்பட்ட வரலாற்றை நாம் பலமுறை கண்டுள்ளோம்.
தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும், ஒன்று பட்டு அணிதிரண்டு நிற்கின்ற சிங்கள அரசு தற்போது தங்களுக்குள் ஏற்பட்டுள்ள தலமைத்துவ மற்றும் அரசியல் போராட்டங்களுக்கு அடித்துக்கொள்வது, தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகளையும் பின்தள்ளும் என்றே எதிர்வு கூறப்படுகின்றது.
இனப்படுகொலையாளியை பிரதமராக நியமித்துள்ளதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச உலகை இலங்கை அரசு கேவலப்படுத்தியுள்ளது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் பிரதமர் ஆக்கியமையை மனித உரிமை அமைப்புக்களும் கடுமையாக விமர்சித்துள்ளன.
மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் இலங்கை எதுவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை. இது தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத ஐக்கிய நாடுகள் சபையே தற்போது இலங்கை அரசை விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழர் தாயகத்தை தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இலங்கை அரச படைகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. தமிழ் மக்கள் வாழ்விடங்களில் சமூக கட்டமைப்பில் குற்றச்செயல்களில் தமிழ் மக்கள் ஈடுபடுவதாக திட்டமிட்டு சதிச்செயல்களை நடத்தும் இலங்கை இராணுவத்தினர் அந்த குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முனைப்புக்காட்டுவதாக தெரிவித்து வடக்கில் சிங்களப்படைகளை தொடர்ந்தும் நிறுத்திவருகின்றன. இந்த படை நிறுவல் தமிழர் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பதுடன் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மக்களின் காணிகளை மக்களிடம் மீள கையளிப்பதற்கு இலங்கைப்படைகள் இலங்கை அரசிடமே பணம் கேட்டு அடம் பிடிக்கின்றமை தமிழ் அரசியல் கட்சிகளின் கையாலகாத தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் நீண்ட காலமாக தரித்து வரும் நிலையில், மைத்திரிபால சிறிசேன மற்றும் படைத்தளபதியினர், அரச படைகள் மக்களின் காணியை விட்டு விலகுவார்கள் என்று சர்வதேச அளவில் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். இருப்பினும், மறுபுறத்தில் காணிகளை விடுவிக்க மக்களின் பணத்தை அரசிடமே கோரி நிர்ப்பந்தம் மேற்கொள்வது மக்களின் மீள் குடியேற்றத்தை தாமதப்படுத்தும் ஒரு செயலாகும்.
வருடந்தோறும் பாதுகாப்பு செலவீனங்களுக்கு என்று பெருந்தொகைப்பணத்தை ஓதுக்கீடு செய்யும் இலங்கை ஏகாதிபத்திய அரசு மக்களின் பணத்தை மீண்டும் மீண்டும் தனது கைக்கூலி இயந்திரத்திற்கு இறைப்பதும் ஒரு வகை மக்கள் புறக்கணிப்பே ஆகும்.
இதேவேளை காணி விடுவிப்பு தொடர்பில் மக்கள் நடத்திவரும் போராட்டம் வருடங்கள் இரண்டை தொடுவது மக்களின் மன ஓர்மத்தை எடுத்தியம்புகின்றது. சுழற்சி முறை ஐனநாயக வழி மக்களின் போராட்டம் நீதியானது. எனினும் இந்த போராட்டத்தை சிங்கள அரசும், அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் தமிழ் அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாதது மிகவும் கவலைக்குரியது ஆகும்.
காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் மக்களின் அறவழிப்போராட்டங்களுக்கு பல்கலைக்கழக சமூகம் ஆதரவு கொடுத்து வருவது தமிழ் மக்களின் இளம் சமூதாயத்தின் பொறுப்புணர்வை வெளிக்காட்டுகின்றது.
ஒரு புறத்தில் சிங்கள அரசு மேற்கொண்டுவரும் சமூக சீரழிவுகளுக்கு மத்தியில் இளம் சமூதாயத்தின் தெளிந்த பார்வை தமிழ் மக்களுக்கு ஒரு வகை நிம்மதியை கொடுக்கின்றது. 2009 ஆண்டில் ஆயுதப்போராட்டம் நிறைவுற்றதன் பின்னர் மக்களின் அரசியல் அபிலாசைகள் அனைத்தும் மக்களின் உணர்வுகளின் ஊடாகவே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்கள், மாணவர்கள் என்று அனைவரும் ஒன்று திரண்டு அறவழியில் நடத்தி வரும் போராட்டங்களின் ஊடாக சிங்கள ஏகாதிபத்திய அரசுக்கும், சர்வதேச உலகிற்கும் செய்திகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இதேவேளை மக்களை கண்டு கொள்ளாத தமிழ் அரசியல் கட்சிகளின் பேசு பொருளாகவும், அரசியல் கருப்பொருளாகவும், மக்களும், மாணவர்களும், முன்னெடுத்துவரும் போராட்டங்கள் அமைந்துள்ளமை அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தமாக அமைந்துள்ளது. இந்த நிலையை கட்சிகளும் புறந்தள்ளிவிட முடியாது.
சிங்கள ஏகாதிபத்திய அரசின் மூலத்திட்டமான ஒரு நாடு ஒரு அரசு திட்டத்தை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு புதிய விளக்கங்களை கொடுத்து சிங்கள அரசின் சரியும் அரசியல் திட்டங்களுக்கு முட்டுக்கொடுத்துவருகின்றது.
உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி தாயக மக்களின் சந்திப்புக்கள் மற்றும் கொள்கை விளக்ககூட்டங்களை நடத்தும் கூட்டமைப்பும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணையை மறந்து அரசின் பக்கம் தாங்கள் சாய்வதனை நியாயப்படுத்திவருகின்றனர்.
இதன் அடிப்படையில் வடக்கு மாகாண சபைக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்கத்தவறியமை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீடித்த மௌனம் சாதிக்கின்றமை, இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பில் அமைதி காக்கின்றமை, வடக்கு கிழக்கில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை ஆதரிக்கின்றமை, போர்க்குற்றம் தொடர்பில் சிங்கள அரசுக்கு ஆதரவாக அமைதி பேணுகின்றமை போன்ற பொறுப்பற்ற செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது வெறுப்பை காட்டிவருகின்றனர்.
இந்த வெறுப்பின் ஒரு அங்கமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் வெளிப்பாடாக ஏமாற்றத்தின் தாக்கமாக தாயகத்தில் புதிய கட்சிகளின் தோற்றம் இடம்பெற்று வருகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றத்தவறியுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற மற்றும் நிலையற்ற அரசியல் நிலைப்பாடுகள் தாயகத்தில் பாரிய அரசியல் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் ஆன தமிழீழ விடுதலைப்புலிகளினால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 2009 ஆண்டின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தேவைகள் அடங்கிய எந்த ஒரு பிரச்சனையையையும் தீர்த்து வைக்கவில்லை.
வட மாகாண சபையின் ஆளுனர் பிரித்தானியாவுக்கு விஐயம் செய்து அங்கு தமிழ் மக்கள் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். சிங்கள அரசின் சதித்திட்டங்களின் ஒன்றான தமிழ் மக்களை பிரித்தாளும் சதிக்கிணங்க, வட மாகாண ஆளுனரின் பிரித்தானிய விஐயம் அமைந்தமையும், லண்டனில் அவர் நடத்திய சந்திப்புக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
அரசியல் ரீதியாக தமிழ் மக்களை பின்னடைய வைக்கவும், சர்வதேச அளவில் ஒன்றுபடும் தமிழ் அமைப்புக்களையும், சர்வதேச நாடுகளையும் தமிழ் மக்களைக்கொண்டே தனிமைப்படுத்துவது சிங்கள அரசின் சதித்திட்டமாகும். ஆளுனரின் லண்டன் விஐயத்தை நடத்தி முடித்த தமிழ்க்குழுக்களும், சிங்கள அரசும் தமிழ் மக்களின் ஒன்று கூடலுக்கு எதிராக சில சதிவலைகளையும் பின்னியுள்ளன.
தமிழ் மக்களின் அரசியல் வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் புலம் பெயர் நாடுகளில் உள்ள வலையமைப்பை அறுத்தெறியும் நோக்கில் வடக்கு ஆளுனரின் விஐயம் அமைந்துள்ளது. இந்த பின்னணி பற்றி அறிந்திராத அமைப்புக்கள் ஆளுனர் லண்டன் வருகையை ஆதரித்தமை அவ் அமைப்புக்களின் அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்கு இடமாக்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்கும் அலுவலகத்தை நிறுவிய இலங்கை அரசு அந்த அலுவலகம் ஊடாக எந்த ஒரு தமிழ் இளைஞனையோ அன்றி ஒரு தமிழ் யுவதியையோ கண்டு பிடிக்கவில்லை.
அலுவலகம் அமைப்பதில் தாமதம் காட்டிய இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிப்பதில் மேலும் தாமதத்தை மேற்கொள்ளுகின்றது. தமிழ் மக்களின் வலிகளை விளங்கிக்கொள்ளாத அமைச்சர்களும் அரச தலைவரும் பிரதமரும் உள்ள நிலையில் இந்த அலுவலகம் எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையையும் மேற்கொள்ளாது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிப்பதில் புறக்கணிப்பை மேற்கொள்ளுவதில் இலங்கையின் பெரும்பான்மையின தலைவர்கள் மத்தியில் எந்த மாறுபாடுகளும் இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மக்களின் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கையில், மன்னாரில் புதைகுழி ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டு வரும் மனித வன்கூட்டுத்தொகுதியின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு உள்ளது.
இதுவரை இருநூறுக்கும் அதிகமான மனித வன்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளமை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் பாரிய சந்தேசகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு எடுக்கப்படும் வன்கூட்டுத்தொகுதிகள் குறித்து ஊடகங்கள் பொறுப்புடன் செய்தி வெளியிடவில்லை.
தமிழ் அரசியல் பிரதிகளோ அன்றி அரசோ உரிய கவனம் அல்லது விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கும் நிலை தமிழ் மக்களின் உரிமைகளை புறக்கணிக்கும் நிலையை எடுத்துக்காட்டுகின்றது.
மீண்டும் மீண்டும் என்று 95 தடவைகளுக்கும் அதிகமாக தோண்டப்பட்டதில் 207 மனித வன் கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளின் முன்னர் திருக்கேதீஸ்வரத்தில் தோண்டப்பட்ட புதைகுழியும், அப்புதை குழியில் எடுக்கப்பட்ட மனித வன்கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை விடயமும் அதிர்ச்சிக்குரியது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முற்றிலும் எதிராகவே சிங்கள ஏகாதிபத்திய அரசு புதிய அரசியல் யாப்பை கொண்டு வருகின்றது. சர்வதேசத்தை ஏமாற்றவும், தமிழ் மக்களின் மேன்முறையீட்டை நீர்த்துப்போக செய்யும் வண்ணம், இலங்கையில் அமையும் அரசியல் யாப்பு அமைக்கப்படும்.
அந்த வகையில் சிங்கள கட்;சிகளும், பௌத்த அரசும் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன. ஒரு புறத்தில் தமிழ் மக்களுக்கு அரசியலில் உரிமைகளை வழங்குவது போன்றும் மறுபுறத்தில் பெரும்பான்மை கட்சிகள் அதனை எதிர்ப்பது போன்றும், தோற்றத்தை ஏற்படுத்தி அனைத்து அரசியல் செயல்பாடுகளிலும் இலங்கை அரசு காலம் தாழ்த்தி வருகின்றது.
புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்படும் என்றும் அவ்வரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஆவன செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதும் பெரிய ஏமாற்றத்தையே கொடுக்கும்.
பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் சிங்கள அரசு தனது விசம தன பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தேவைகளில் ஒன்றான இணைந்த வடக்கு கிழக்கை திட்டமிட்டு பிரித்ததும், அதனை ஒருபோதும் இணைக்கமாட்டோம் என்று திடசங்கல்ப்பம் பூண்டு அதற்கேற்ப தமிழ் அரசியல் தலமைகளை விலைக்கு வேண்டியமையும் சிங்கள அரசு மேற்கொள்ளும் ஒரு நீண்ட கால திட்டமே ஆகும்.
வடக்கு கிழக்கு இணைந்த தாயகமே எங்களின் அரசியல் இலக்கு என்று தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் சில தொடர்ந்தும் சிங்கள அரசுக்கு தங்கள் ஆதரவை வழங்கி மக்களை ஏமாற்றி அரசியல் சுகபோகங்களை அனுபவித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சிங்கள அரசு கடந்த இரண்டு தசாப்த காலமாக தமிழ் அரசியல் கட்சிகளை விலைக்கு வாங்கும் நடவடிக்கையை திட்டமிட்டு முனைப்புடன் சிறப்புற நடத்தி வருகின்றது. சிங்கள அரசின் சதிவலைக்குள் சிக்கி நாளுக்கு நாள் இடம்மாறும் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை மாறிக்கொண்டே வருகின்றது.
கொண்ட கொள்கையில் உறுதியின்மை மக்களின் அரசியல் தேவைகள் பற்றிய தெளிவின்மை பணம் மற்றும் பதவி ஆகியவற்றுக்கு விலைபோகும், தலமை போன்றவற்றினால் அழிந்து கொண்டு இருப்பது எங்கள் தமிழ் மக்களும், அவர்களின் எதிர்காலமும் தான். சிங்களம் விரித்த சதிவலை இலங்கையில் மட்டும் அல்லாமல், சர்வதேச அளவில் பாரிய திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
மாவீரர்களின் தியாகத்தின் அடிப்படையிலும், இது வரை காலமும் மக்கள் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகள் மற்றும் அர்ப்பணிப்புக்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் வகையில் தாயகத்தில் கடுந்துயரங்களை சந்தித்து வரும் தமிழ் மக்களும் புலம்பெயர் சமூகமும், தமிழ் தேசிய அமைப்புக்களும், ஒன்று சேர அழைப்பு விடுக்கின்றோம். கடந்த 2009 ஆம் ஆண்டு தாயகத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுந்துயரத்தின் பின்னர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்கள் பிளவுபட்டு பிரிந்துபோய் உள்ளனர்.
தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபட எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டன. இந்த நிலை இனியும் தொடராமல் இருக்க மக்கள் அனைவரும் மாவீரகளின் தியாகத்தின் முன்னிலையில் ஒன்று சேர வேண்டும்.
காலம் எங்களுக்கு கொடுத்த ஒரு தலை சிறந்த கொடையாளிகளே மாவீரர்கள். அவர்களின் தியாகங்கள் என்றும் வீண் போகக்கூடாது. அதேவேளை எங்கள் மாவீரர்களின் தியாகத்தின் எல்லையை அடுத்த சந்ததிக்கு எடுத்துக்கூறும் நாம் மக்களுக்கான விடுதலையையையும் வேகப்படுத்தவேண்டும்.
மாவீரர்களையும், தமிழ் மக்களின் அரசியல் தேவையையையும் உலக மக்களுக்கு நாம் எடுத்துகூறும் ஒரு சந்தர்ப்பமே நாம் வருடத்தில் ஒரு முறை அனுட்டிக்கும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஆகும். எனவே மக்கள் அனைவரும் மற்றும் அமைப்புக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் மாவீரர் நாளை அனுட்டித்து தமிழ்த்தாயின் ஒரு வயிற்றுப்பிள்ளை என்று உலகிற்கு எடுத்தியம்புவோம். வாருங்கள் சகோதரர்களே வேறுபாடுகளைக்களைவோம். மாவீரர்களின் பெயரால் நாம் சகோதரர்களாக தமிழ் தாயின் மடியில் ஒன்றுசேர்வோம்.
சர்வதேச அளவில் அடையாளம் காணப்பட்ட எமது தேவையினை பூர்த்தி செய்ய, எமது பாதையில் இருந்து விலகிச்சென்றுள்ள புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்களும் தாயகத்தில் உள்ளவர்களும் எங்கள் மாவீரர் தியாகத்தையும் தாயக தமிழர்களையும் நினைவில் நிறுத்தி ஒன்று திரள வேண்டும். என்றென்றும் இந்த பூமிப்பந்தில் எங்கள் மாவீர செல்வங்களின் தியாகம் நிலைத்திருக்கும்.
தாயகம் மலரும். கனவு நனவாகும். இது நிச்சயம்.
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
27.11.2018