மைத்திரி வெறும் பொம்மையாக மாறும் நிலை ஏற்பட்டது!
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சகல அதிகாரத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டதன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரம் இல்லாத வெறும் பொம்மையாக மாறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்க, பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தன்னை பிரதமராக நியமிக்குமாறும் சகல அதிகாரங்களையும் தனக்கு வழங்கி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறும் அந்த கடிதத்தில் கேட்டிருந்தார்.
ஜனாதிபதியை ஜனாதிபதி நாற்காலியில் வெறுமனே உட்கார வைக்க முயற்சித்தனர்.
ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுமல்ல அனைத்து அதிகாரங்களும் ஓரிடத்தில் இருந்தன.
அமைச்சர்கள் எடுக்க வேண்டிய முடிவுகளை ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார குழுவே எடுத்தது” எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.